/

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயருக்கு எதிரான முக்கிய சாட்சி மர்ம மரணம்

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் ஃபிராங்கோ முலக்கலுக்கு எதிராக முக்கிய சாட்சியாகக் கருதப்படும் பாதிரியார்

News image

குரியகோஸ் கட்டுதாரா

Updated On :22 அக்டோபர் 2018, 8:21 pm


கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் ஃபிராங்கோ முலக்கலுக்கு எதிராக முக்கிய சாட்சியாகக் கருதப்படும் பாதிரியார் குரியகோஸ் கட்டுதாரா(62), மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரைப் பல்வேறு தருணங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியது தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் முலக்கலுக்கு எதிரான வழக்கு, பாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
மர்ம மரணம்: இந்த வழக்கில், முக்கிய சாட்சியாகக் கருதப்படும் பாதிரியார் குரியகோஸ் கட்டுதாரா, பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தின் தசுயா பகுதியிலுள்ள கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான இடத்தில் மர்மமான முறையில் திங்கள்கிழமை மரணமடைந்துள்ளார்.
இது குறித்து, காவல் துறையினர் தெரிவித்ததாவது: 
கட்டுதாரா தன்னுடைய அறையில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
பிரேதப் பரிசோதனை: அவரது உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. எனவே, மரணத்துக்கான காரணம் குறித்து கண்டறிய அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, கட்டுதாராவின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், பிரேதப் பரிசோதனை ஆலப்புழை மருத்துவமனையில் நடைபெற வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை எழுப்பினர். இந்த வழக்கில், முலக்கல் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், பாதிரியார் கட்டுதாராவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 
கேரள மாநிலம், ஆலப்புழையைச் சேர்ந்தவரான கட்டுதாரா 15 நாள்களுக்கு முன்புதான், தசுயா கத்தோலிக்க திருச்சபைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, முலக்கலுக்கு எதிராகப் புகார் கூறிய கன்னியாஸ்திரியையும், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கன்னியாஸ்திரிகளையும் ஆதரித்ததற்காக, திருச்சபை நிர்வாகிகள் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாக கட்டுதாரா தெரிவித்திருந்தார்.
கேரள அரசிடம் மனு: இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் கட்டுதாரா மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதைத் தொடர்ந்து, முலக்கல் மீது குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரிக்கு, தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கேரள அரசிடம் திங்கள்கிழமை மனு ஒன்றை அளித்தனர்.
வழக்கின் பின்னணி: பஞ்சாபில் உள்ள ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகாரை முன்வைத்தார். கடந்த 2014-இல் இருந்து 2016 வரையில் முலக்கல் பல்வேறு தருணங்களில் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர் குறவிலங்காடு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இதனடிப்படையில், முலக்கலிடம் தொடர்ந்து 3 நாள்கள் விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி அவரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும்; வழக்கு விசாரணைக்காக இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே கேரளத்துக்கு வர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன், அவருக்கு ஜாமீன் வழங்கி, கடந்த 15-ஆம் தேதி, கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.