கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

உலக நாடுகளிடையே காணப்படும் வர்த்தகப் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.21- ஆக வரலாறு காணாத

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 11:22 pm


உலக நாடுகளிடையே காணப்படும் வர்த்தகப் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.21- ஆக வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனுடன் சேர்ந்து சர்வதேச சந்தையில் காணப்படும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதுடன் ரூபாய் மதிப்பு சரிவுக்கும் காரணமாகியுள்ளது. 
அந்நியச் செலாவணி சந்தையில் தொடர்ந்து சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 
இறக்குமதியாளர்களுக்கான டாலர் தேவையை ஈடு செய்ய ரிசர்வ் வங்கி அதிகளவிலான டாலர்களை சந்தையில் புழக்கத்தில் விட்டு வருகிறது. இதனால், ரூபாய் மதிப்பில் காணப்பட்டு வரும் கடும் வீழ்ச்சியானது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாத காரணத்தால் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இது, பங்குச் சந்தைகளிலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் 71.00-ஆக இருந்த ரூபாய் மதிப்பானது சரிவிலிருந்து மீண்டு 70.80 ஆனது. வங்கிகள் அதிக அளவில் டாலரை புழக்கத்தில் விட்டதையடுத்து, ரூபாய் மதிப்பு 70.71 வரை உயர்ந்தது. இருப்பினும், இந்த சந்தோஷம் இறுதி வரை நீடிக்கவில்லை. எதிர்பாராத காரணங்களால் வர்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.71.21-ஆனது. அந்நியச் செலாவணி வரலாற்றில் ரூபாய் மதிப்பு இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டது இதுவே முதல் முறை.
ஆசிய நாடுகளின் கரன்ஸிகளில் ரூபாய் மதிப்பு மட்டும் தான் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஓராண்டில் ரூபாய் மதிப்பானது 11 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதே இதற்கு சான்றாக கூறப்படுகிறது.
பங்குச் சந்தையில் பாதிப்பு: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் பாதிப்பு பங்குச் சந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து நான்காவது நாளாக பின்னடைவை சந்தித்தது. வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், ரியல் எஸ்டேட், மின்சாரம், வங்கித் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிகளவில் விற்பனை செய்தனர். இதனால், பல முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பங்குகளின் விலை வீழ்ச்சியைச் சந்தித்தது.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்கின் விலை அதிகபட்சமாக 4.58 சதவீதம் சரிந்தது. இதையடுத்து, பவர் கிரிட் பங்கின் விலை 2.92 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு 2.69 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கியின் பங்கு 2.51 சதவீதமும், ஐடிசி பங்கு 2.01 சதவீதமும் குறைந்தன. 
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 332 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 38,312 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டியும் 98 புள்ளிகள் இழப்பைக் கண்டு 11,582 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.