தேர்தல் ஆணையம் பயந்தது போல் ஆகி விடுமோ?!

தேர்தல் ஆணையம் பயந்தது போல் ஆகி விடுமோ?!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு செலவிடலாம் என்பதை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து, அதற்கான கணக்குகளையும் கேட்டு வாங்கிக் கொள்கிறது.


விஜயவாடா: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு செலவிடலாம் என்பதை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து, அதற்கான கணக்குகளையும் கேட்டு வாங்கிக் கொள்கிறது.

இதெல்லாம் கணக்கில் வரும் செலவு. கணக்கில் வராத செலவு என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அதைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

மற்ற எந்த மாநிலங்களையும் விட ஆந்திராவில் இதுவரை பார்த்திராத வகையில் தற்போதைய மக்களவைத் தேர்தல் மற்றும் பேரவைத் தேர்தலில் ஏராளமான பணம் வாரி இரைக்கப்படுகிறது. இதுபற்றி கள நிலவரம் சொல்வது என்னவென்றால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்றால் ரூ.100 கோடியும், பேரவைத் தொகுதி வேட்பாளர் என்றால் ரூ.30 கோடியும் செலவிட திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

அட அப்படியா? என்று வாயைப் பிளக்க வேண்டாம்..

இதுவே ஆந்திராவின் கிராமப்புறப் பகுதியில் இருக்கும் தொகுதியானால் எம்.பி. வேட்பாளருக்கு ரூ.70 லட்சமும், பேரவை வேட்பாளர் ரூ.28 லட்சமும் செலவிட்டால் போதுமாம். இதன்படி தொகுதிக்கு தொகுதி செலவு வேறுபடுகிறது.

இவர்கள் இப்படி திட்டமிட்டிருந்தாலும், மாநிலத்திலும் சரி நாடு முழுவதும் சரி தேர்தல் ஆணையத்தால் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்படுகிறதே? பிறகு எப்படி பணத்தை செலவிடுவது? என்று கேட்டால் அதற்கு சில கட்சிகளின் பிரமுகர்கள் சொல்வது என்னவென்றால், தற்போது தேர்தல் ஆணையம் கைப்பற்றும் பொருட்கள், பணம் எல்லாமே ஒரு சிட்டிகை அளவுதான். வெறும் கண்துடைப்புக்காகவே இது செய்யப்படுகிறது. ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவுக்கு  இரண்டு நாட்களுக்கு முன்பு பணமும், மதுபானமும் எந்தத் தங்குத் தடையும் இன்றி சரளமாகப் புழங்கும் என்கிறார் தைரியமாக.

ஏற்கனவே, வரும் மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில்தான் அதிக பண நடமாட்டம் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தனது அச்சம் கலந்த கணிப்பை வெளியிட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை ஆந்திராவில் மட்டும் ரூ.108 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதெல்லாம் வேட்பாளர்கள் தகுதி திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை. அவர்களது பணப் பலத்தை நம்பியே தேர்வாகிறார்கள். ஒரு எம்பி வேட்பாளராக வேண்டும் என்றால் அவர் அவரது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பேரவைத் தொகுதி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கியப் பிரமுகர்கள்.

அதாவது ஒரு தொகுதியில் இரண்டு வேட்பாளர்களுமே செல்வாக்கானவர்கள் என்றால் இருவருக்குமே இரு அந்தஸ்து, கௌரவம் தொடர்பான விஷயமாகி விடுகிறது. எனவே, இவர்கள் அந்த தொகுதியில் ஒரு வாக்குக்கு சராசரி ரூ.2,000 என்பதை ரூ.3,500 வரை உயர்த்திவிடுவார்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

இவ்வளவு ஏன், ஒரு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் அன்று மட்டுமே ரூ.10 லட்சத்தை செலவிடுகிறார். அடுத்து வாக்குப் பதிவு நடைபெறும் வரை அவர் செலவிடும் தொகை பல கோடிகளில் இருப்பது நியாயம்தானே என்கிறார்கள் கட்சித் தொண்டர்களில் சிலர்.

செலவிடும் தொகையில் பெரும்பகுதி தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் கணிசமாக உயரும்.

வாக்காளர்களுக்கும் தொண்டர்களுக்கும் பணம், மதுபானம் மற்றும் சில பரிசுப் பொருட்களையும் வேட்பாளர்கள் வாரி வழங்குவார்கள்.

இப்படி ஜனநாயகமே பணநாயகமாக மாறி நிற்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தால் எந்த அளவுக்குத்தான் இவர்களை கட்டுப்படுத்த முடியும் என்பது புரியவில்லை.

பாவம்.. தேர்தல் ஆணையம் பயந்தது போலவே ஆகிவிடுமோ அல்லது அதிகம் செலவிடும் மாநிலமாக ஆந்திராவை ஆக்கவிடாமல் தமிழகம் தடுத்துவிடுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com