குடியுரிமை மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல: அமித் ஷா பேச்சு!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல: அமித் ஷா பேச்சு!


குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேறியதையடுத்து, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,

"இந்தியாவில் பிரிவினை ஏற்படாமல் இருந்திருந்தால், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இந்த மசோதாவை 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்திருந்தால், இன்றைக்கு நிலைமை மோசமாக இருந்திருக்காது. இந்த மசோதாவில் 6 மதங்களை உள்ளடக்கியதற்கு எந்தவித பாராட்டும் கிடையாது. ஆனால், முஸ்லிம்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதில் மட்டுமே முழு கவனமும் இருக்கிறது.

வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள் சிறுபான்மையினரா? ஒரு அரசினுடைய மதம் இஸ்லாம் என்றால், அங்கு முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. இந்த மசோதா முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. நேரு - லியாகத் ஒப்பந்தத்தின் சாராம்சத்தை அண்டை நாடுகள் பின்பற்றுவதில்லை.

காங்கிரஸ் எதைச் செய்தாலும் அது மதச்சார்பின்மை. யாரும் எதுவும் கூறமாட்டார்கள். எத்தனை காலத்துக்கு மக்களை ஏமாற்றப்போகிறீர்கள்? இந்த சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14-ஐ பாதிக்காது.

இந்தியா பிரிக்கப்பட்டதன் பின்னணியில் ஜின்னாதான் இருந்தார் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். அவருடைய கோரிக்கையின்பேரிலே பிரிக்கப்பட்டது. காங்கிரஸ் ஏன் இதற்கு ஒப்புக்கொண்டது? எதற்காக இது மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது?

இந்த மசோதாவில் ரோஹிங்கியாக்களைச் சேர்க்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர்கள் நேரடியாக இந்தியாவுக்கு வருவதில்லை. அவர்கள் வங்கதேசத்துக்குச் செல்கின்றனர், அதன்பிறகு அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றனர்.

இந்த மசோதாவுக்கு சிவசேனை நேற்று ஆதரவு தெரிவித்தது. ஒரே இரவில் தங்களது நிலைப்பாட்டை மாற்றியதற்கான விளக்கத்தை அவர்கள் மகாராஷ்டிர மக்களுக்கு அளிக்க வேண்டும். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் உள்ளிட்ட எவையுமே முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. முத்தலாக் தடைச் சட்டம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு உரிமையை வழங்கியுள்ளது. அடுத்தது, சட்டப்பிரிவு 370. ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம்கள் மட்டும்தான் வாழ்கின்றனரா? ஹிந்துக்கள், பௌத்தர்கள் இல்லையா? இது ஏன் இப்படி பார்க்கப்படுகிறது? குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானதாகும்? இந்த மசோதாவில் முஸ்லிம்களின் குடியுரிமை தொடர்பாக எந்தவொரு முன்மொழிவும் கிடையாது.

பெண்களுக்கு உரிமை இருக்கக் கூடாதா? சட்டப்பிரிவு 370 ரத்துக்குப் பிறகும் காஷ்மீர் அமைதியாகத்தான் இருக்கிறது. அதுபோல குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவும் முஸ்லிம்களுக்கு எதிரானதாக நான் பார்க்கவில்லை. பாகிஸ்தானுடையக் கருத்தும், காங்கிரஸ் கட்சியின் கருத்தும் ஒன்றாகவே உள்ளது.

யாருடைய உணர்வையும் இந்த மசோதா புண்படுத்தாது. எந்தவொரு சமூகத்தினருத்தும் அதிருப்தியையும் ஏற்படுத்தாது. இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினர் அநீதிக்கு உள்ளாக்கப்படுவார்கள் என நிறைய பேர் வருத்தம் கொள்கிறார்கள். சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படாது" என்றார்.

இதைத்தொடர்ந்து, இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கேகே ராகேஷ் தீர்மானம் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானத்துக்கு 124 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 99 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். எனவே, இந்தத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com