
தைரியம் இருந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மீது பொது வாக்கெடுப்பை நடத்துங்கள் என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மிகவும் வீரியமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் ராணி ராஷ்மோனி அவென்யூவில் நடைபெற்ற பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
"பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது என்பதற்காகவே அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என அர்த்தமாகிவிடாது. அவர்களுக்கு தைரியம் இருந்தால், சிஏஏ மற்றும் என்ஆர்சி முடிவுகள் மீது ஐ.நா. கண்காணிப்பில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தட்டும். இதில் ஒருவேளை பாஜகவுக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், அவர்கள் ஆட்சியைவிட்டு விலக வேண்டும்.
பாஜக 1980-இல் உதயமானது. ஆனால், 1970-ஆம் ஆண்டுக்கான குடியுரிமை ஆவணங்களைக் கேட்கிறது. போராட்டங்களை முடக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தாலும், பாஜகவால் வெற்றி பெற முடியாது" என்றார்.
அதேசமயம், போராட்டங்களில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும்போது தொப்பிகளை அணிந்து குறிப்பிட்ட ஒரு சமூகம் மீது அவதூறு பரப்புவதற்காக, கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக தொப்பிகளை வாங்கி வருவதற்கான தகவல் வருவதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
முன்னதாக, சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை மேற்கு வங்க மாநிலத்தில் அனுமதிக்கப்படாது என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.