புல்வாமாவில் நடந்தது திட்டமிட்டு நடந்த முதல் தற்கொலைப் படைத் தாக்குதல்: விசாரணையில் தகவல்

புல்வாமாவில் நடந்தது திட்டமிட்டு நடந்த முதல் தற்கொலைப் படைத் தாக்குதல்: விசாரணையில் தகவல்

புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவப் பகுதியில் இருந்த மாதிரிகள் திரட்டப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Published on


புது தில்லி: புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவப் பகுதியில் இருந்த மாதிரிகள் திரட்டப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புல்வாமாவில் நடந்த தாக்குதல் குறித்து இதுவரை நடந்த விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள்..

புல்வாமா தாக்குதல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலாகும்.

இது வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. புல்வாமாவில் அவந்திபோரா அருகே பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்துக்கு, இடது பக்கத்தில் இருந்து வந்த  தற்கொலைப் படை பயங்கரவாதி அடில் அகமது தார் ஓட்டி வந்த கார், 5வதாகச் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயல்வது போலச் சென்ற சில நொடிகளில் பயங்கரவாதி வெடிபொருளை வெடிக்கச் செய்தான். இதில் 49 பாதுகாப்புப் படையினர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வாகனம் தனது பயணத்தைத் தொடங்கி 12 மணி நேரத்துக்குப் பிறகு தாக்குதலுக்கு இலக்கானது.  அதாவது சரியாக ஜம்முவில் காலை 3.30 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கிய வாகனம், மாலை 3.30க்கு தாக்குதலுக்கு உள்ளானது.

விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற பாதுகாப்புப் படை வீரர்கள், ஸ்ரீநகர் சென்று தாங்கள் பணியில் இணைந்ததை பதிவு செய்ய வேண்டும். அதற்காக ஏராளமான வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, பாதுகாப்புப் படை வாகனம் சென்று கொண்டிருந்த சாலைக்கு லிங்க்-சாலை வழியாக வந்த பயங்கரவாதி, பாதுகாப்புப் படை வாகனங்களுக்கு இடது பக்கத்திலேயே வந்து கொண்டிருந்தது. திடீரென ஒரு வாகனத்துக்கு அருகேச் சென்று வெடித்துச் சிதறியது.

இதில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா என்ற கேள்விக்கு, பொதுவாக பாதுகாப்பு வாகனங்களுக்கு எப்போதும் இரண்டு வழியில் அச்சுறுத்தல் வரும், அதாவது கண்ணிவெடித் தாக்குதல் அல்லது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு. இதுபோன்ற தாக்குதல்களைக் கையாள பாதுகாப்புப் படை வீரர்கள் தயாராகவே இருந்தனர். ஆனால், புல்வாமா தாக்குதல் முற்றிலும் எதிர்பாராத ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல். இதுவரை நடந்ததே இல்லை என்பது போன்ற திட்டமிட்ட தாக்குதல் இது என்பது முதற்கட்ட விசாரணையில் கிடைத்திருக்கும் சில தகவல்களாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com