ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

அருணாசல் அரசை கலைக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

அருணாசல பிரதேசத்தில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய பாஜக அரசை கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரியுள்ளது.

News image

அருணாசல் தலைநகர் இடாநகரில் வன்முறையாளர்கள் தீக்கிரையாக்கிய வீடு (கோப்புப் படம்).

Updated On :26 பிப்ரவரி 2019, 12:54 am IST



அருணாசல பிரதேசத்தில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய பாஜக அரசை கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரியுள்ளது. மேலும், வன்முறைச் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்தவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அருணாசல பிரதேச காங்கிரஸ் தலைவர் டகாம் சஞ்சய், மாநில முன்னாள் முதல்வர் நபம் துகி, வடகிழக்கு காங்கிரஸுக்கான பொதுச் செயலர் லுயிஸினோ ஃபலேரோ ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அளிக்கப்பட்டுள்ளது. 
அந்தக் கடிதத்தில் காங்கிரஸ் கூறியுள்ளதாவது: அருணாசல பிரதேசத்தில் 6 சமூகத்தினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றுவந்த அமைதியான ஆர்ப்பாட்டங்களை பெமா காண்டு தலைமையிலான மாநில அரசு தவறாகக் கையாண்டுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, அதற்கு பொறுப்பாக்கும் வகையில் முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் செளனா மெயின், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்பாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலோ விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், போலீஸாரின் நடவடிக்கையில் அப்பாவிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை மற்றும் பதற்றமான சூழல் மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் பரவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் மாநில அரசு முற்றிலும் செயலற்று இருப்பதை மத்திய அரசு தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அருணாசல பிரதேச காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வடகிழக்கு காங்கிரஸுக்கான பொதுச் செயலர் லுயிஸினோ ஃபலேரோ கூறுகையில், அருணாசல பிரதேசத்தை, மற்றுமொரு ஜம்மு காஷ்மீராக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. இங்கு ஏற்கெனவே நிறைய பிரச்னைகள் உள்ளன. வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்றார்.
அருணாசல பிரதேசத்தில் 6 சமூகத்தினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். துணை முதல்வர் செளனா மெயின் இல்லத்துக்கு தீ வைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என்று அருணாசல பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.