இந்தியா மீது பாகிஸ்தான் ஓர் அணுகுண்டு வீசினால், அந்த நாடு பதிலுக்கு 20 குண்டுகளை வீசி நம்மை அழித்துவிடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியாக பதவி வகித்த முஷாரஃப், கடந்த 1999-இல் கார்கில் போரை வழிநடத்தினார். ராணுவப் புரட்சி மூலம் கடந்த 1999-இல் பாகிஸ்தான் அதிபரான இவர், கடந்த 2008 வரை ஆட்சியில் இருந்தார். இவர் மீது கொலை, தேசத் துரோகம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த 2016-ஆம் ஆண்டு துபைக்கு சென்ற இவர், அதன் பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை.
இந்நிலையில், துபையில் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு முஷாரஃப் பேட்டியளித்தார். அப்போது, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நிலவும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளுமா? என்பது தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில், பாகிஸ்தானின் டான் நாளிதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒரு நாடு மற்றொரு நாடு மீது போர் தொடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுபோன்று பேசாதீர்கள். அது முற்றிலும் ராணுவ ரீதியிலான திட்டங்களைச் சார்ந்தது. எனவே, இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற வாய்ப்பில்லை.
இந்தியா மீது பாகிஸ்தான் ஓர் அணுகுண்டு வீசினால், பதிலுக்கு இந்தியா 20 குண்டுகளை வீசி நம்மை அழித்து விடும்.
அதற்கு ஒரே தீர்வு, முதல் தாக்குதலிலேயே இந்தியா மீது நாம் (பாகிஸ்தான்) 50 குண்டுகளை வீச வேண்டும். அதன் பிறகு அவர்களால் 20 குண்டுகளை நம் மீது வீச முடியாது. முதல் தாக்குதலில் 50 குண்டுகளை வீசுவதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ளதா?
ஜம்மு-காஷ்மீரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்தியாவுக்குச் சாதகமான சூழல் உள்ளது. அதனால், அவர்களால் துல்லியத் தாக்குதல் நடத்த முடிந்தது. அதே நேரத்தில், காஷ்மீரில் உள்ள மற்ற பெரும்பாலான பகுதிகளில் பாகிஸ்தானுக்குச் சாதகமான சூழல் இருப்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்வதற்கு முன்பாக, பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்று முஷாரஃப் கூறியதாக, அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



