பாதுகாப்புப் படைவீரர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
முன்னதாக, ராணுவ அதிகாரிகளின் மகள்களான ப்ரீத்தி கேதா கோகலே (19), காஜல் மிஸ்ரா (20) ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது பணியில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களுக்கு எதிராக வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுக்கும்போது, வீரர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விதிகளை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்புப் படை மீது இளைஞர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. முக்கியமாக பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படை வீரர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது, பயங்கரவாதிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு நடத்தப்படுகிறது.
இது தவிர ராணுவ வீரர்களின் வாகனம் தெருவில் செல்லும்போது கல்வீச்சு நடத்தப்படுகிறது. இதில் பல வீரர்கள் காயமடைகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மனித உரிமைகளை மீறுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. அதே நேரத்தில் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்க என்ன விதி உள்ளது என்று மனுதாரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். கல்வீசும் வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுத்ததற்காக பாதுகாப்புப் படை வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்ட அங்கு சென்றுள்ள பாதுகாப்புப் படையினர், தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உரிமை இல்லையா என்றும் மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாதுகாப்புப்படையினர் மீது கல்வீசியதாக 9,760 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் பேரவையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் கூட முதல்முறை அக்குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசப்படுவது அங்கு அதிகம் என்பது உறுதியாகி உள்ளது. இது அவர்கள் மீதான உரிமை மீறல் இல்லையா என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனுவில், மத்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகம், ஜம்மு-காஷ்மீர் அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியோரையும் பிரதிவாதிகளாக ப்ரீத்தி, காஜல் ஆகியோர் சேர்த்துள்ளனர்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர். இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, பாதுகாப்புத் துறை அமைச்சகம், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



