

புது தில்லி: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறியிருப்பது குறித்து விசாரித்து வருவதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் புது தில்லியில் இன்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
தனது பேச்சைத் துவக்கும் முன்பே, இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதைத் தவிர்க்குமாறு கூறிவிட்டு, தனது பேச்சைத் தொடங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது, பாகிஸ்தான் எல்லையில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக இன்று காலை இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அவற்றை இந்திய விமானப் படை விமானங்கள் எதிர்கொண்டன. அப்போது இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானின் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது.
இந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் 21 ரக விமானம் ஒன்றை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளோம். இந்த சம்பவத்தில் விமானியும் காணாமல் போயுள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய விமானி தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை விமானம் மிக் - 21 பிஸோன் ஜெட் விமானத்தில் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், இதுவரை திரும்பவில்லை என்று ஏஎன்ஐ சற்று நேரத்துக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.
முன்னதாகவே, இந்திய விமானப் படை விமானம் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் இருந்த கமாண்டோ அபிநந்தன் என்ற விமானியை பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்து, சில விடியோக்களையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.