
புது தில்லி: புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து மாநில முதல்வர்களுடன் வரும் 8 ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு வெளியிட்டது. ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே முதலில் இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது.பின்னர் அதன் சுருக்கப்பட்ட வடிவமானது தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கருத்துத் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. பின்னர் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க அது ஜூன் 30-ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டு, தற்போது ஆகஸ்ட்15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து மாநில முதல்வர்களுடன் வரும் 8 ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனிதவளத்துறை திங்களன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கல்வி அமைச்சர்களுடன் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர கல்வித்துறை உயர் அதிகாரிகளும் இடம்பெறுவார்கள்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்கள் தங்கள் தரப்பு தொடர்பான கருத்தை வெளிப்படுத்தலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.