

லக்னௌ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உத்தர பிரதேச மாநில பாஜக தலித் பெண் எம்.பி ஒருவர் தன்னை காங்கிரசில் இணைதுக் கொண்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பஹாரியாச் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாவித்ரி புலே. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவர் பாஜக தலைமையைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
தலித் சமூகத்தைக் சேர்ந்தவரான இவர் பாஜகவில் தலித்துகளுக்கு மதிப்பில்லை, என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், கட்சித் தலைமையின் மீது அதிருப்தி அடைந்த சாவித்ரி புலே காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமையன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
அதேபோல கடந்த 2009-ம் ஆண்டு பதேபூர் தொகுதியின் எம்.பி.யாக இருந்த ராகேஷ் சச்சனும் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் ஆகிய இருவர் அரசிலும் எம்.எல்ஏ.வாக இருந்தவர்.
பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாதிக் கட்சி தற்போது கூட்டணி அமைந்துள்ளது. பதேபூர் தொகுதி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த ராகேஷ் சனியன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இவர்கள் இருவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளாரான பிரியங்கா காந்தி ஆகிய இருவர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
உ.பி.யில் கிழக்குப் பகுதியில் பாஜக மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகளைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அந்த கட்சிக்கு வலுவூட்டுவதாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.