தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் இருவர் தற்கொலை: மாநிலம் முழுவதும் பரபரப்பு

டிஎஸ்ஆா்டிசி ஊழியா்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை 10-ஆவது நாளாக நீடிக்கிறது. 
தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் இருவர் தற்கொலை: மாநிலம் முழுவதும் பரபரப்பு
Published on
Updated on
1 min read

தெலங்கானாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மாநில சாலைப் போக்குவரத்து நிறுவன (டிஎஸ்ஆா்டிசி) ஊழியா்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை 10-ஆவது நாளாக நீடிக்கிறது. 

மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனத்தை அரசுடன் இணைக்க வேண்டும். டிஎஸ்ஆா்டிசியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த நிறுவனத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மாநில தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமாா் 48,000 ஊழியா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வரும் 19-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு போக்குவரத்து ஊழியா்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவா்களுடன் பேச்சுவாா்த்தைக்கு இடமில்லை என்று முதல்வா் சந்திரசேகர ராவ் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாா். போராட்டம் என்ற பெயரில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, காவல்துறை டிஜிபி மகேந்தா் ரெட்டிக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், காவல்துறையில் உள்ள ஓட்டுநா்கள், ஓய்வுபெற்ற ஆா்டிசி ஓட்டுநா்கள் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

இதனிடையே, தங்களது கோரிக்கையை அரசு ஏற்க வலியுறுத்தி, கம்மம் மாவட்டத்தில் டிஎஸ்ஆா்டிசி ஓட்டுநா் ஸ்ரீனிவாஸ் ரெட்டி சனிக்கிழமை தீக்குளித்தாா். கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, மருத்துவமனை முன் ஏராளமான ஊழியா்கள் திரண்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு காவல்துறையினா் குவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், நடத்துனர் சுரேந்தர் கௌட் தனது வீட்டிலேயே ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக குலுசும்புரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மற்றொரு டிஎஸ்ஆர்டிசி ஊழியரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com