
சந்திரயான் 2 திட்டத்தின் ஒரு கட்டமாக, நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தை நாசா தனது விண்கலத்தின் மூலம் புகைப்படம் எடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் சந்திரயான் 2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது.
நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக, சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த 7-ஆம் தேதி பிரித்துவிடப்பட்ட விக்ரம் லேண்டர்,
நிலவில் தரையிறங்க குறைந்த தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
கட்டுப்படுத்த இயலாத நிலையில் நிலவின் தரைப்பகுதியில் வீழ்ந்த விக்ரம் லேண்டர் சேதமின்றி இருப்பதாகவும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அதைச் சுற்றிவரும் நாசாவின் எல்ஆர்ஓ விண்கலம், விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தை கடந்த 17-ஆம் தேதி புகைப்படம் எடுத்துள்ளது. அந்த விண்கலம், நிலவின் தென்துருவப் பகுதியை முன்பு எடுத்த படங்களுடன், தற்போதைய படத்தையும் ஒப்பிட்டு விக்ரம் லேண்டரின் நிலை குறித்த தகவல்களை ஆய்வு செய்ய இருப்பதாக எல்ஆர்ஓ விண்கலத் திட்டத்தின் துணை விஞ்ஞானியான ஜான் கெல்லர் கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்ஆர்ஓ விண்கலம் படம் எடுத்தபோது, நிலவில் சம்பந்தப்பட்ட இடத்தில் இருளாக இருந்ததால் புகைப்படத்தின் பெரும்பகுதி நிழல்போலத் தெரிவதாகவும், அதை நாசா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.