ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினால் தக்க பதிலடி: பாகிஸ்தானுக்கு இந்தியத் தூதர் எச்சரிக்கை

ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பினால், அந்நாட்டுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் எச்சரிக்கை
ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினால் தக்க பதிலடி: பாகிஸ்தானுக்கு இந்தியத் தூதர் எச்சரிக்கை


ஐ.நா. பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பினால், அந்நாட்டுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். 
அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். 
அப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுவார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி அண்மையில் தெரிவித்திருந்தார். 
இது தொடர்பாக, சையது அக்பருதீனிடம் நியூயார்க்கில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்ததாவது:
சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக ஒவ்வொரு நாடும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. 
சில நாடுகள் சில விவகாரங்களில் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்ளலாம். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். ஆனால், குறிப்பிட்ட நாடு (பாகிஸ்தான்) இந்த விவகாரத்தை ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் எழுப்ப முயற்சிக்கிறது. 
அந்த நாடு கீழ்த்தரமாக நடந்து கொண்டால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அந்நாடு தனது அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது.
அந்த அணுகுமுறை நீண்ட நாள்களுக்குச் செல்லுபடியாகாது. இதுவரை, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாகவே அந்நாடு அறியப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பொதுச் சபையில் எழுப்பினால், இனி வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கு சொந்தமான நாடாகவும் அது அறியப்படும்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, பல நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதுவே அந்நாட்டுக்கு (பாகிஸ்தான்) பதிலடியாக இருக்கும் என்றார் சையது அக்பருதீன்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
இந்தப் பிரச்னையில் உலக நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. இருந்தபோதிலும், அந்நாட்டின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
விவாதிக்கப்பட வாய்ப்பு:
 ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தின்போது, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் விவாதிக்க வாய்ப்பிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார். அப்போது, ஜம்மு-காஷ்மீரில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரத்தையும் குட்டெரெஸ் எழுப்ப வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com