செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

24 ஆண்டுகளுக்குப் பின் முலாயம் சிங், மாயாவதி ஒரே மேடையில் பிரசாரம்

அரசியலில் இரு துருவங்களாக இருந்த சமாஜவாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவும், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

News image

உத்தரப் பிரதேச மாநிலம், மைன்புரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை வரவேற்ற சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ்,

Updated On :19 ஏப்ரல் 2019, 7:51 pm

DIN


அரசியலில் இரு துருவங்களாக இருந்த சமாஜவாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவும், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக, பகுஜன்சமாஜ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மைன்புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முலாயம் சிங் யாதவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, அந்த தொகுதியில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மாயாவதி பங்கேற்றார்.
மைன்புரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்த மாயாவதியை வரவேற்ற முலாயம் சிங் தொண்டர்களிடையே பேசியதாவது:
நீண்ட காலம் கழித்து நானும், மாயாவதியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறோம். எனக்காக பிரசாரம் செய்ய வந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமாஜவாதி கட்சி தொண்டர்கள் மாயாவதிக்கு  எப்போதும் மரியாதை அளிக்க வேண்டும் என்றார்.
அதையடுத்து மாயாவதி பேசுகையில், முலாயம் சிங் யாதவுக்கும், எனக்கும் இடையே பகைமை இருந்தும், நான் அவருக்காக பிரசாரம் செய்ய வந்தது மக்கள் அனைவருக்கும் வியப்பாக இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால் சில சமயங்களில் மக்களைக் காப்பதற்காக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். 
அனைத்து தரப்பு மக்களுக்கும் முலாயம் சிங் நன்மை செய்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்தான் உண்மையான தலைவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவராக இன்றும் முலாயம் சிங் திகழ்கிறார். அவர் மோடியை போல பொய்யான தலைவர் இல்லை என்றார்.
இறுதியில் உரையை முடிக்கும்போது, ஜெய் பீம் என்று தனது கட்சியின் கோஷத்தை எழுப்பிய மாயாவதி,  சமாஜவாதி கட்சியின் கோஷமான ஜெய் லோகியா என்பதையும் கூறியது தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு பகுஜன்சமாஜ்- சமாஜவாதி கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. 
அதையடுத்து விருந்தினர் மாளிகை முறைகேடு வழக்கில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த 1995-ஆம் ஆண்டு முலாயம் சிங் அரசு கவிழ்க்கப்பட்டது. 
இந்நிலையில், லக்னெளவில்  விருந்தினர் மாளிகையில் மாயாவதி தனது ஆதரவாளர்களுடன் தங்கியிருந்தபோது, அவரை சமாஜவாதி கட்சியின் தொண்டர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. 
அதையடுத்து, மாயாவதி-முலாயம் சிங் இடையே எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை. இப்போது, 24 ஆண்டுகளுக்கு பின்பு அவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்ததும், ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டதும் அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பாஜக விமர்சனம்
முலாயம் சிங் மற்றும் மாயாவதி ஒரே மேடையில் பிரசாரம் செய்தது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அலை வீசுவது நிரூபணமாகியுள்ளது. பகுஜன்சமாஜ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் தனித்தனியாக பாஜகவை எதிர்த்தால் படுதோல்வி அடையும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால் பாஜக அலையை சமாளிப்பதற்காக இரு தலைவர்களும் இணைந்து ஒன்றாக பிரசாரம் செய்துள்ளனர். ஒருகாலத்தில், சமாஜவாதி கட்சியினரை வாழ்நாளின் அவமானச் சின்னம் என்று கூறிய மாயாவதி, இப்போது அவர்களை புகழ்ந்து பேசி வருகிறார். உத்தரப் பிரதேச மக்கள், பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக உள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.