உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்துள்ளார். எனினும், அவை அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுத்துள்ள ரஞ்சன் கோகோய், இதற்கு பின்னால் மாபெரும் சதி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் தனது புகார்களை பிரமாணப் பத்திரமாக அனுப்பியதைத் தொடர்ந்து, அதுதொடர்பாக விசாரிக்க சனிக்கிழமை 3 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.
அந்தப் பெண் ஊழியர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்துள்ளார். அக்டோபரில்தான் கோகோய் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட பெண், முறைகேடு புகார் ஒன்றில் சிக்கியதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டவர். அதுதொடர்பாக தில்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அவர் பிராமணப் பத்திரங்களை அனுப்பியுள்ளார். இத்தகவலை உச்சநீதிமன்ற தலைமைச் செயலாளர் சஞ்சீவ் சுதாகர் கல்கோன்கர் சனிக்கிழமை உறுதி செய்தார். எனினும், பெண் ஊழியரின் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், தவறான நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறினார்.
அதே சமயம், நீதித்துறையின் சுதந்திரத்துடன் தொடர்புடைய பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெறவுள்ளது என்று உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்தது. அந்த அமர்வில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோரும் இடம்பெற்றனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ள முதலாவது நீதிமன்ற அறையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது. 
விசாரணை அமர்வுக்கு தலைமை வகித்த போதிலும், இந்த விவகாரம் குறித்து உத்தரவு பிறப்பிக்கும் பொறுப்பை மற்ற இரு நீதிபதிகளிடம் கோகோய் ஒப்படைத்தார்.
உச்சநீதிமன்றம் கருத்து: தலைமை நீதிபதி மீதான புகார் குறித்து உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்த அறிக்கையை நீதிபதி அருண் மிஸ்ரா வாசித்தார். அவர் கூறியதாவது:
இந்த விவகாரத்தை பரிசீலனை செய்தோம். இந்த தருணத்தில் நீதித்துறை சார்ந்த உத்தரவு எதையும் பிறப்பிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த விஷயத்தில் ஊடகங்கள் கட்டுப்பாட்டு உணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்வது குறித்து அவர்களின் முடிவுகளுக்கே விட்டு விடுகிறோம். 
மிகக் கடுமையான, இழிவான குற்றச்சாட்டுகள் காரணமாக நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுவதுடன், சீரமைக்க இயலாத அளவுக்கு நீதித்துறையின் மாண்பு சிதைக்கப்படும் என்ற நிலையில், எதைப் பிரசுரிக்க வேண்டும், எதைப் பிரசுரிக்க வேண்டாம் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்தார்.
ரஞ்சன் கோகோய் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். வரும் நவம்பர் 17-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவுபெறுகிறது. 
பெண் ஊழியரின் ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது புகார் தெரிவித்திருக்கும் பெண் ஊழியர் மீதான முறைகேடு வழக்கு, தில்லி பெருநகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனு மீது, ஏப்ரல் 24-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று பெருநகர நீதிமன்ற தலைமை நீதிபதி மணீஷ் குரானா தெரிவித்தார்.
ஹரியாணாவைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர், கடந்த மாதம் 3-ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.10 லட்சம் கேட்டதாகவும், அதில் முதல் தவணையாக  ரூ.50,000 லஞ்சம் பெற்றுவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் அந்தப் பெண் மீது அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதன் அடிப்படையில் பெண் ஊழியர் மீது ஏமாற்றுதல், குற்ற நோக்கம், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
அந்த வழக்கில் கடந்த மாதம் 12-ஆம் தேதி தில்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.  இந்நிலையில், பெண் ஊழியர் மற்றும் அவர் தொடர்புடைய ஆட்கள் மூலமாக தனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது என நவீன் குமார் தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

மிகப் பெரிய சதிவேலை

பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் புகார்களின் பின்னணியில் மாபெரும் சதி இருப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார். 

அவர் கூறியதாவது:

இதை நம்ப முடியவில்லை. இப்படியொரு குற்றச்சாட்டை மறுக்கும் அளவுக்கு நான் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. இதற்குப் பின்னால் மாபெரும் சக்திகளின் சதி இருக்கிறது. நாட்டில் அதிகாரம் படைத்த இரண்டு பதவிகள் உள்ளன. ஒன்று பிரதமர் பதவி; மற்றொன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி. இதில், தலைமை நீதிபதி பதவியை சிலர் சிதைக்க நினைக்கிறார்கள்.தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த வாரத்தில் நான் இடம்பெற்றுள்ள அமர்வில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன. இத்தகைய சூழலில் என் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது 20 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, எனது வங்கிக் கணக்கில் ரூ.6.80 லட்சம் மட்டுமே இருக்கிறது. மொத்தம், ரூ.21.80 லட்சம் இருந்த நிலையில், அதில் ரூ.15 லட்சத்தை வீடு சீரமைக்கும் பணிக்காக எனது மகளுக்கு வழங்கிவிட்டேன். இதுபோக ரூ.40 லட்சம் அளவுக்கு சேமநல நிதி இருக்கிறது. எனது மொத்த சொத்து மதிப்பு இதுதான்.
யார் ஒருவரும் பணத்தாசை காட்டி என்னை அணுக முடியாது. அதனால், வேறு ஏதாவது ஒரு வழியில் என்னை முடக்க வேண்டும் என்று நினைத்தவர்கள், இந்த வழியைக் கையாண்டுள்ளனர். 20 ஆண்டுகால தன்னலமற்ற சேவைக்குப் பின்னர், ஒரு தலைமை நீதிபதியாக எனக்கு கிடைத்திருக்கும் பரிசு இதுதான்.
தலைமை நீதிபதிக்கான பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பேன். நீதித்துறை சார்ந்த பணிகளை எவ்வித அச்சமும் இன்றி தொடருவேன். இன்னும் 7 மாதங்களில் என்னென்ன வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வேன். நீதித்துறையை பலிகடாவாக மாற்ற முடியாது என்றார் கோகோய். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com