வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. முக்கியமாக தலைநகர் தில்லி முழுவதுமே போராட்டக்களமாக காட்சி அளிக்கிறது. 

உத்தரப்பிரதேசத்திலும் கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது வன்முறையாகவும் வெடித்துள்ளது. இதில் பொதுச்சொத்துக்கள் பல சேதப்படுத்தப்படுகின்றன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 'குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள்/ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.  

ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில், காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் இடதுசாரி கட்சிகள் முழு நாட்டையும் தீக்கிரையாக்கியுள்ளன. 

லக்னோ மற்றும் சம்பாலில் வன்முறை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இழப்புகளை ஈடுசெய்ய பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்' என்று அவர் கூறினார்.

மேலும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அரசின் அனுமதியின்றி எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தக்கூடாது; அவ்வாறு தடையை மீறி செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி, குடியுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டது எந்த மதத்திற்கும், சமூகத்தின் ஒரு பிரிவினருக்கும் எதிரானது அல்ல. மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவே இது கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com