அமலுக்கு வந்தது 10% இட ஒதுக்கீடு: பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குப் பொருந்தும்

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், நாடு முழுவதும் திங்கள்கிழமை
அமலுக்கு வந்தது 10% இட ஒதுக்கீடு: பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்குப் பொருந்தும்


பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில், பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், மத்திய அரசால் 124ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா, மக்களவையில் கடந்த 8ஆம் தேதி வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.
அப்போது இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 323 எம்.பி.க்கள் வாக்களித்தனர். 3 எம்.பி.க்கள் மட்டும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் இடஒதுக்கீடு மசோதா, மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய அரசு கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தது. மசோதா மீது சுமார் 8 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, இடஒதுக்கீடு மசோதாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜ்லீஸ் இ கட்சி ஆகியன எதிர்ப்புத் தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி. கே.வி. தாமஸ் பேசியபோது, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தனது ஆட்சிக்காலத்தில், பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஆனால் அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
மற்றோர் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசியபோது, இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருப்பதாகவும், ஆனால் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அந்த மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசின் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் சமாஜவாதி கட்சி ஆதரித்தது. அக்கட்சியின் எம்.பி. தர்மேந்திர யாதவ் பேசியபோது, இடஒதுக்கீடு மசோதாவை சமாஜவாதி ஆதரிக்கிறது; இருப்பினும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை அரசு வெளியிட வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றார். லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் இதே கருத்தை முன்வைத்தது.
பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி, 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதாகவும், இந்திய நீதித்துறை சேவை அமைப்பை அரசு உருவாக்க வேண்டும் என்றும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
இதையடுத்து மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பதிலளித்து பேசினார். அவர் கூறியபோது, பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்தார்.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, மத்திய அரசின் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா சட்டரீதியில் செல்லுமா? தகுதிபடைத்தவர்கள் இதனால் பயனடைவார்களா? என கேள்வியெழுப்பின.
இதனிடையே, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் திமுக சார்பில், 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்பக்கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 
அந்த தீர்மானத்துக்கு எதிராக 155 எம்.பி.க்களும், ஆதரவாக 18 பேரும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
இதன்பின்னர், எதிர்க்கட்சிகளின் சார்பில் 5 திருத்தங்கள், மசோதா மீது கொண்டு வரப்பட்டன. அந்த திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, மாநிலங்களவையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநிலங்களவையில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் வெளிநடப்பு செய்தன.
வாக்கெடுப்பில், 165 எம்.பி.க்கள், மசோதாவை ஆதரித்தும், 7 எம்.பி.க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். இதன்மூலம், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதால், அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த சனிக்கிழமை தனது ஒப்புதலை வழங்கினார்.
இந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் சார்பில் திங்கள்கிழமை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
அதில், அரசியலமைப்பு (சட்டத் திருத்தம்) சட்டம் -2019ன் முதலாவது பிரிவிலுள்ள 2ஆவது துணைப் பிரிவு அளித்துள்ள அதிகாரங்களின்கீழ், அந்த சட்டம் ஜனவரி 14ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com