முதல்வராகும் முன்பு பெயரில் சிறிய மாற்றம் செய்த எடியூரப்பா! காரணம்?

நான்காவது முறையாக கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் பாஜக மூத்தத் தலைவர் எடியூரப்பா. 
முதல்வராகும் முன்பு பெயரில் சிறிய மாற்றம் செய்த எடியூரப்பா! காரணம்?


பெங்களூரு: நான்காவது முறையாக கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் பாஜக மூத்தத் தலைவர் எடியூரப்பா. 

கர்நாடக முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டதை அடுத்து, அவரது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், கர்நாடக முதல்வராக பதவியேற்கும் முன்பே, அவர் தனது பெயரில் சிறிய மாற்றம் செய்துள்ளார். அதாவது இதுவரை Yeddyurappa என்று ஆங்கிலத்தில் தனது பெயரை எழுதி கையெழுத்திட்டு வந்த நிலையில், நேற்று ஆளுநரிடம் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது அவர் கையெழுத்திடும் போது Yediyurappa என்று எழுதியே கையெழுத்திட்டிருந்தார். அதாவது Yeddyu-க்கு பதிலாக yediyu என்று அதாவது இரண்டு ddக்கு பதிலாக ஒரு dயும், அதற்கு அடுத்த ஒரு iயும் இடம்பிடித்திருந்தது.

ஏற்கனவே அவர் தனது பெயரை Yediyurappa என்று தான் எழுதிவந்தார். ஆனால் 2007ம் ஆண்டு ஜோதிடர்களின் அறிவுறுத்தலின்படி, பெயரை Yeddyurappa என்று மாற்றினார். அப்போது 2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நாளிதழ்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

தற்போது மீண்டும் பழைய எடியூரப்பாவாகவே (Yediyurappa) மாறியுள்ளார். பெயரை மாற்றிய நிலையில், அவர் 4வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடிமட்டத்தில் இருந்து உச்சம் தொட்ட பி.எஸ்.எடியூரப்பா!

அடிமட்டத் தொண்டராக இருந்து க உயர்ந்து உச்சத்தை தொட்டவர். கர்நாடக அரசியலில் 47 ஆண்டுகளாக துடிப்போடு செயலாற்றி வரும் பி.எஸ்.எடியூரப்பா, தென்னிந்தியாவின் நுழைவுவாயிலென கருதப்படும் கர்நாடகத்தில் முதல்முறையாக 2008-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை கொண்டுவந்தவர். தற்போது 3-ஆவது முறையாக பாஜக ஆட்சியை கர்நாடகத்தில் நிறுவியிருக்கிறார்.

 கர்நாடகத்தில் பெரும்பான்மை லிங்காயத்து சமுதாயத்தின் தன்னிகரில்லா தலைவராக விளங்கும் எடியூரப்பா, கர்நாடகத்தில் பாஜகவை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்தவர். மண்டியா மாவட்டத்தின் கே.ஆர்.பேட் வட்டத்தின் பூகனகெரே கிராமத்தில் 1943-ஆம் ஆண்டு பிப்.27-ஆம் தேதி சித்தலிங்கப்பா மற்றும் புட்டதாயம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் எடியூரப்பா. இவர் நான்கு வயதாக இருக்கும்போது தாய் புட்டதாயம்மா காலமாகினார்.

 மண்டியாவில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தார். அதன்பிறகு சிவமொக்கா மாவட்டத்தின் சிகாரிபுராவுக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. 15 வயதிருக்கும்போது ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த எடியூரப்பா, அரசியலில் தீவிரம் காட்டினார்.

1972-ஆம் ஆண்டு சிவமொக்கா மாவட்டத்தின் ஷிகாரிபுரா நகராட்சித் தேர்தலில் உறுப்பினராக வென்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய எடியூரப்பா, ஆரம்பகாலம் தொட்டு ஜனசங்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். 1975-இல் ஷிகாரிபுரா நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கர்நாடகத்தில் ஜனசங்கத்தின் புதிய வடிவான பாஜக, 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கட்சி கர்நாடகத்தில் வேர்பிடிக்க காரணமாக இருந்தவர். காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதாதளம் ஆட்சி நடத்திய போது எதிர்க்கட்சித் தலைவராக திறம்பட பணியாற்றியவர் எடியூரப்பா.

2006-ஆம் ஆண்டு மஜதவுடன் கூட்டணி அமைத்து முதல்முறையாக ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்தார். அமைச்சராக ஒருமுறைகூட பதவிவகித்திராத நிலையில், குமாரசாமி தலைமையிலான மஜத-பாஜக கூட்டணி ஆட்சியில் முதல்முறையாக துணைமுதல்வராக பதவிவகித்த எடியூரப்பா, 20 மாத ஆட்சிக்குப் பிறகு அமைந்த பாஜக-மஜத கூட்டணியில் 2007-ஆம் ஆண்டு நவ.12-ஆம் தேதி முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

ஒருவாரகாலத்தில் மஜத தனது ஆதரவை திரும்பப்பெற்றதால், 7 நாள்களுக்குபிறகு நவ.19-ஆம்தேதி அப்பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், 2008-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தின் எட்டுத்திசைகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜகவை ஆட்சியில் அமரவைத்தார்.

2008-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி 2-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா, பாஜகவின் உள்கட்சிபூசல்காரணமாக ஆட்சி நடத்த தடுமாறினார். நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தபோதும், உள்கட்சி சூறாவளியில் எடியூரப்பா சுருண்டு விழுந்துவிட்டார். சட்ட விரோத சுரங்கத் தொழில் குறித்து லோக் ஆயுக்த அளித்த அறிக்கையில் எடியூரப்பா பெயர் இடம்பெற்றதால், அரசியலில் தன்னால் ஆளாக்கப்பட்ட கட்சியினராலே 2011-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். கர்நாடக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக முன்னாள் முதல்வரான எடியூரப்பா, ஊழல் குற்றச்சாட்டின்பேரில் 23 நாள்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

 பாஜகவில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அக்கட்சியில் இருந்து 2012-ஆம் ஆண்டு வெளியேறி கர்நாடக ஜனதாகட்சியைத் தொடங்கி 2013-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். 10 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும் 6 இடங்களில் மட்டுமே கர்நாடக ஜனதாகட்சிக்கு வெற்றி கிடைத்தது. தனிக்கட்சி சரியாக வராது என்று கருதியதால், 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஜன.2-ஆம் தேதி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு கர்நாடக மாநில பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்ட எடியூரப்பா, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். 76 வயதாகும் எடியூரப்பாவின் செல்வாக்கு, அவர் சார்ந்திருக்கும் லிங்காயத்து சமுதாயத்தின் ஆதரவு பாஜகவின் வெற்றிக்கு உதவும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நம்பியதுபோல நடந்தது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அல்லும்பகலும் அயராது உழைத்த எடியூரப்பா, 2017-ஆம் ஆண்டு நவ.2-ஆம் தேதிமுதல் 75 நாள்கள் கர்நாடகத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயணம் செய்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். இது தனது கடைசிதேர்தல் என்று எடியூரப்பா அறிவிக்காவிட்டாலும், முதல்வர் வாய்ப்புக்கு இதுதான் கடைசிதேர்தல் என்பதை உணர்ந்து தீவிரமாக தேர்தல் பணியாற்றினார்.

அதற்கு பலன் கிடைத்ததுபோல, 2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களில் மக்கள் வெற்றி வாய்ப்பை அளித்தனர். எந்த கட்சிக்கும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வந்தபோதும், கர்நாடக அரசியலில் போர்குதிரை என்று பேர்பெற்ற எடியூரப்பா, 2018-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி மூன்றாவது முறையாக கர்நாடகத்தின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 15 நாட்களை ஆளுநர் கொடுத்திருந்த நிலையில், காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 24 மணி நேரத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலாத நிலையில் மே 19-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அதன்பிறகு குமாரசாமி தலைமையில் பதவியேற்றுக்கொண்ட மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 14 மாதங்கள் ஆட்சி செய்தது. கடந்த ஜூலை 1 முதல் 10-ஆம் தேதிவரையில் 16 காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, சட்டப் பேரவையில் ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு வீழ்ந்தது. இதையடுத்து, 4-ஆவது முறையாக கர்நாடகத்தின் முதல்வராக எடியூரப்பா வெள்ளிக்கிழமை(ஜூலை 26) பதவியேற்றிருக்கிறார்.

போராட்டகுணத்தை இயல்பாக பெற்றிருப்பதால் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து, மக்களின் எண்ணங்களுக்கு தகுந்தப்படி எடியூரப்பா ஆட்சி நடத்துவார் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com