
திருவனந்தபுரம்: பாஸ்போர்ட் இல்லாமல் சுமார் இரண்டரை மாதங்களாக கேரளாவில் சுற்றித் திரிந்த இலங்கை நபர் சனியன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கையை உலுக்கியெடுத்த ஈஸ்டர் குண்டுவெடிப்பின் காரணமாக 353 பேர் மரணமடைந்தனர். இதுதொடர்பாக 100 பேருக்கு மேல் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேசமயம் இலங்கை தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் கேரளா பகுதிகளில் தங்கி பயிற்சி பெற்று இருக்கலாம் என்று இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா கருது தெரிவித்து இருந்தார். ஆனால் இதை இந்திய அரசு மறுத்து விட்டது.
இந்நிலையில் பாஸ்போர்ட் இல்லாமல் சுமார் இரண்டரை மாதங்களாக கேரளாவில் சுற்றித் திரிந்த இலங்கை நபர் சனியன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள தம்பனூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் மலுகே ஜுத் செல்பான் டியஸ்(30) என்பதும்,அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கேரளாவுக்கு அவர் வந்த நோக்கம் குறித்து அவர் சரியாக விளக்கமளிக்கவில்லை. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி கேரளா வந்ததாகவும், தனது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய தனது கைப்பை திருட்டுப் போய் விட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து அளிக்கப்பட்ட தகவலை அடுத்து தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட இதர உளவுத்துறை அதிகாரிகள் தற்போது அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...