Enable Javscript for better performance
அயோத்தியில் ராமர் கோயில்: மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவு   - Dinamani

சுடச்சுட

  

  அயோத்தியில் ராமர் கோயில்: மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவு   

  By DIN  |   Published on : 10th November 2019 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AYODHYA1

  அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதும் உச்சநீதிமன்ற வளாகத்தில் மகிழ்ச்சியில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரைத் தழுவிக் கொண்ட துறவி.

  உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம், முஸ்லிம் தரப்பினர் மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நீடித்து வந்த பிரச்னை, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் சனிக்கிழமை அளித்த தீர்ப்பின் மூலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதியாகியுள்ளது.
  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு மூலவர் ராம் லல்லா, நிர்மோஹி அகாரா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. 
  அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

  இதனிடையே, இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காண்பதற்கு அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வந்தது. 40 நாள்கள் நடைபெற்ற தொடர் விசாரணைக்குப் பிறகு அக்டோபர் 16-ஆம் தேதியுடன் இறுதி வாதங்கள் நிறைவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
  இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பளித்தனர். 1,045 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் சுமார் 45 நிமிடங்கள் வாசித்தார். அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது. இடிக்கப்பட்ட மசூதிக்கு கீழே 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இருந்தது தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

  ராமபிரான் அயோத்தியில்தான் அவதரித்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கையில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரே அந்த இடத்தின் உரிமையாளர். இருப்பினும், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக, அங்கிருந்த பாபர் மசூதியை ஹிந்து கரசேவகர்கள் இடித்தது தவறான செயல். அதற்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் சரியான பரிகாரம் செய்தாக வேண்டும். இல்லையெனில் மதச்சார்பற்ற ஒரு நாட்டில் நீதி நிலைநாட்டப்படாமல் போகும்.
  எனவே, அந்தச் செயலுக்குப் பரிகாரமாக, அயோத்தி நகரின் முக்கியப் பகுதியிலேயே முஸ்லிம் தரப்பினர் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கித் தர வேண்டும்.
  மேலும், ராமர் கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்வதற்கு புதிய அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு 3 மாதங்களில் உருவாக்க வேண்டும். அந்த அறக்கட்டளையிடம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்.

  அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கை நம்பிக்கையின் அடிப்படையில் அணுகாமல், ஆதாரங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அணுகியது.
  அயோத்தி நகரம் 1857-ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்பிருந்தே  சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதேசமயம், 1857-ஆம் ஆண்டுக்கு முன் அந்த இடத்தில் மசூதி மட்டுமே இருந்தது என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்களை முஸ்லிம் தரப்பு வழங்கவில்லை. காலியாக இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. ஏற்கெனவே இருந்த அடித்தளத்தின் மீதே மசூதி கட்டப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
  உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு ஹிந்து சமூக அமைப்புகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில குறைகள் இருந்தாலும், இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக முஸ்லிம் தலைவர்கள் கூறியுள்ளனர்.

  வரவேற்பு: உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியம், உத்தரப் பிரதேச ஷியா மத்திய வக்ஃபு வாரியம் ஆகிய முஸ்லிம் அமைப்புகளும், ஹிந்து அமைப்பான நிர்மோஹி அகாராவும் வரவேற்றுள்ளன.  
  மறு ஆய்வு மனு-முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்: அதேசமயம், இந்த தீர்ப்பு தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
  அயோத்தி வழக்கில் தீர்ப்பை தெரிந்து கொள்வதற்காக, சனிக்கிழமை காலையிலேயே மனுதாரர்களும், பல்வேறு சமூக அமைப்பினரும், பத்திரிகையாளர்களும் நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திக்குமுக்காடினர்.

  பின்னணி: அயோத்தியில் கடந்த 1528-ஆம் ஆண்டு பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டு, அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது ஹிந்துக்களின் வாதமாகும். 
  கடந்த 1885-இல், மசூதிக்கு வெளியே வழிபாட்டுத் தலம் அமைக்க அனுமதி கோரி ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அதன்பிறகுகே சட்ட சிக்கல்கள் எழுந்தன. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
  கடந்த 1949-ஆம் ஆண்டு டிசம்பரில், பாபர் மசூதிக்குள் அடையாளம் தெரியாத சிலர் ராமர் சிலையை வைத்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. 

  உண்மையும், நீதியும் நிலை நாட்டப்பட்டுள்ளது
  நமது நிருபர்

  அயோத்தி வழக்கில் உண்மையும், நீதியும் நிலை நாட்டப்பட்டுள்ளது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக தில்லியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: பாரத மக்களின் நம்பிக்கை, உணர்வு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நீண்ட நெடிய போராட்டத்துக்கு உயிர்த் தியாகம் செய்தவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறோம். 
  பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த இந்த விவகாரத்துக்கு இறுதித் தீர்ப்புக் கிடைத்திருப்பதில் மகிழ்வடைகிறோம். அனைத்துத் தரப்பினரின் வாதங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உண்மையும், நீதியும் நிலை நாட்டப்பட்டுள்ளது பழையவற்றை மறந்து விட்டு அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் அமைதி, சாந்தி நிலவ ஒத்துழைக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி என்றார் மோகன் பாகவத்.

  பிரம்மாண்ட அளவில் ராமர் கோயில் விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை
  நமது நிருபர்


  அயோத்தியில் பிரம்மாண்ட அளவில் ராமர் கோயில் கட்டத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் செயல் தலைவரும் வழக்குரைஞருமான ஆலோக் குமார் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  உலக வரலாற்றில் வழங்கப்பட்ட மிக முக்கிய தீர்ப்புகளில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முதன்மை பெறுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க காலம் காலமாகப் போராடிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், கௌரவத்தையும் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் ஹிந்துக்களின் 491 ஆண்டுகால நீண்ட நெடிய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
   இந்தத் தீர்ப்பு உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி. நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கக் காரணமான இந்திய தொல்லியல் துறைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அயோத்தியில் பிரம்மாண்ட அளவில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை அதுதான் என்றார் அவர்.

  எனது நிலைப்பாடு உறுதியாகியுள்ளது

  "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். அந்தத் தீர்ப்பால் எனது நிலைப்பாடு சரி என உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று ராமஜென்மபூமி இயக்கத்தின் முக்கிய நபரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
  அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பால் அயோத்தி விவகாரத்தில் எனது நிலைப்பாடு சரி என உறுதியாகியுள்ளது. நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இந்தியாவின் சுதந்திர இயக்கத்தை அடுத்து, மிகப்பெரியதான ராமஜென்மபூமி இயக்கத்துக்கு எனது பங்களிப்பை செய்வதற்காக எல்லாம் வல்ல இறைவன் எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.  ராமர் கோயில்-பாபர் மசூதி சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது, வேற்றுமைகளை மறந்து அனைவரும் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டிய நேரமாகும் என்று அத்வானி கூறியுள்ளார்.


   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai