எங்களுக்கு 162 எம்எல்ஏ-க்கள் ஆதரவு; இரவு 7 மணிக்கு உங்களுக்குத் தெரியும்: சிவசேனை

தங்களுக்கு ஆதரவாக 162 எம்எல்ஏ-க்கள் இருப்பதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தங்களுக்கு ஆதரவாக 162 எம்எல்ஏ-க்கள் இருப்பதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நாளுக்கு நாள் அரசியல் குழப்பம் எழுந்து வந்த நிலையில், அம்மாநில முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸும் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றனர். இதையடுத்து, அங்கு நிலவி வந்த அரசியல் சூழல் பரபரப்பின் உச்சத்துக்கே சென்றது.

இந்த பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டப்பேரவையில் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரியும் சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சனிக்கிழமை மாலை உச்சநீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பை செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது எம்எல்ஏ-க்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தின. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் இவ்விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறது. ரினைசன்ஸ் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாதுகாப்புக் காரணம் கருதி நேற்று இரவு ஹயாத் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தங்களுக்கு ஆதரவாக 162 எம்எல்ஏ-க்கள் இருப்பதாக டிவீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவில், 

"நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக உள்ள 162 பேரும் முதன்முதலாக ஒன்று கூடுவதை ஹயாத் ஹோட்டலில் இரவு 7 மணிக்குப் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பதிவில் மகாராஷ்டிர ஆளுநரைக் குறிப்பிட்டிருந்த சஞ்சய் ரௌத், நீங்களே வந்து பாருங்கள் என்று தங்களுக்கான பெரும்பான்மையைக் காண்பிக்கும் வகையில் டிவீட் செய்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்திலேயே தங்களுக்கு ஆதரவாக 154 எம்எல்ஏ-க்கள் இருப்பதாகத்தான் சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குறிப்பிட்டிருந்தன. இந்நிலையில், சஞ்சய் ரௌத் 162 எம்எல்ஏ-க்கள் என குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்கக்ப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com