கேரள தங்கக் கடத்தல்: கூடுதல் பணத்துக்காக தங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொண்ட 'கூட்டாளிகள்'

ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட கூட்டாளிகள், அதிகப் பணத்துக்காக தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்ட தகவல் அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள தங்கக் கடத்தல்: கூடுதல் பணத்துக்காக தங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொண்ட 'கூட்டாளிகள்'
கேரள தங்கக் கடத்தல்: கூடுதல் பணத்துக்காக தங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொண்ட 'கூட்டாளிகள்'

கொச்சி: ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட கூட்டாளிகள், அதிகப் பணத்துக்காக தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்ட தகவல் அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட கூட்டாளிகள் மூலம் கேரளத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 21 முறை 164 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்துமே திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாகவே கடத்தப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் விவகாரத்தில் மூளையாக இருந்து செயல்பட்ட ரமீஸ், ஒவ்வொரு கிலோ தங்கத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஸ்வப்னா, சந்தீப், சரித்துக்கு கமிஷனாக அளிக்க வேண்டும். கூடுதலாக தலா ரூ.50 ஆயிரம் நன்கொடையாகவும் அளிப்பார். ஆனால், ஒரு முறை கூட ரமீஸ், கடத்தி வரப்பட்ட தங்கத்தின் உண்மையான அளவை இவர்களுக்கு சொன்னது இல்லை. 25 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டால் 15 கிலோ என்றுதான் ரமீஸ் தனது கூட்டாளிகளுக்கு தெரிவித்துள்ளார்.

அதுபோலவே, ஸ்வப்னாவும், சரித்தும் தங்கக் கடத்தல் விவகாரம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு தெரிந்தே நடப்பதாகவும், அவர்களுக்கும் ஒரு கிலோ தங்கத்துக்கு தங்களுக்கு வழங்குவதைப் போலவே கமிஷன் தொகை தர வேண்டும் என்று ரமீஸை ஏமாற்றி பணம் பெற்று வந்துள்ளனர்.

ஆனால், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு தங்கக் கடத்தல் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ரமீஸ் கொடுக்கும் கமிஷன் தொகை அவர்களுக்கு அளிக்கப்படுவதாக  நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள வெள்ளத்தில் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்திலும் வீடு கட்டும் ஒப்பந்தத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒதுக்கி கமிஷனாக 3.6 கோடியைப் பெற்றுள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ் மட்டும் ரூ.1 கோடியை கமிஷனாகப் பெற்றுள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு தூதரகத்தின் பெயரில் பல ஆண்டுகளாக தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விமானம் மூலம் தூதரகத்தின் வழியாகக் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவத்தில் தீவிரவாத தொடா்பு கண்டறியப்பட்டதால் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகிறது. இது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா், அவரது மனைவி செளமியா, ரமீஸ் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா்.மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com