செப்டம்பர் 14 முதல் நாடாளுமன்றக் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
புது தில்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பாதுகாப்பான நடைமுறைகளுடன் கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இத்தகைய சூழலில், வரும் செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழைக்காலக் கூட்டத்தொடரின்போது 18 கூட்டங்களை நடத்துவதற்கு அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
கூட்டத்தொடரின்போது எம்.பி.க்களிடையே தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளதாகவும், பார்வையாளர் மாடம் உள்ளிட்டவற்றிலும் எம்.பி.க்களுக்கு இருக்கைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்களின் வசதிக்காக பெரிய அளவிலான திரைகள், இருக்கைகளிடையே தடுப்புகள், நுண்கிருமிகளை அழிப்பதற்காக புறஊதாக் கதிர்களை வெளியிடும் கருவிகள் உள்ளிட்டவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமைக்கப்படவுள்ளன.
எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மக்களவை காலை நேரத்திலும், மாநிலங்களவை மாலை நேரத்திலும் செயல்பட வாய்ப்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
நாடாளுமன்ற விதிகளின்படி, ஒரு கூட்டத் தொடர் முடிந்த அடுத்த 6 மாதங்களில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடர் தாமதமானது.
இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத் தொடரை பாதுகாப்புடன் நடத்துவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதன்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரவு-பகலாக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கரோனா தொற்று அச்சுறுத்தலை தவிர்த்து, அவை அலுவல்களை சுமுகமாக நடத்திச் செல்ல பல புதிய தொழில்நுட்பங்கள் நாடாளுமன்ற அவைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.
மாடங்களில் அமரும் எம்.பி.க்கள், அவை அலுவல்களை சிரமமின்றி மேற்கொள்வதற்கு வசதியாக பெரிய தொலைக்காட்சி திரைகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து உறுப்பினர்களும் அவை அலுவல்களில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு இருக்கைக்கு முன்பாகவே தனி ஒலிக்கருவிகள் அமைக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற அவைகளில் குளிர்சாதன வசதிகள் பயன்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூலம், கரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளதால், கிருமித் தொற்றை அழிக்கும் புறஊதா கதிர்வீச்சு பயன்படுத்தப்படும்.
இது தவிர, உறுப்பினர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இடையேயான நெருக்கத்தைத் தடுக்க பிளாஸ்டிக் திரைகள் பொருத்தப்படும்.
நாடாளுமன்ற அலுவல்களை நேரடியாக ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர். மிக அத்தியாவசியமான காரணங்களுக்கு மட்டுமே காகிதம் பயன்படுத்தப்படும். மற்றபடி, காகிதப் பயன்பாடு தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.
1952-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு புதிய மாற்றங்களுடன் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...