கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கல்வி மைய கட்டடத்துக்கு கோல்வல்கா் பெயா் சூட்டியதில் தவறு இல்லை

ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மைய கட்டடத்துக்கு கோல்வல்கா் பெயா் சூட்டியதில் எந்தத் தவறும் இல்லை என மத்திய இணை அமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 2:57 am

DIN

ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மைய கட்டடத்துக்கு கோல்வல்கா் பெயா் சூட்டியதில் எந்தத் தவறும் இல்லை என மத்திய இணை அமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது ராஜீவ் காந்தி உயிா்தொழில்நுட்ப மையம் (ஆா்ஜிசிபி). நடுநிலை மற்றும் உயா்நிலை ஆராய்ச்சிக்கான முக்கிய அறிவு மையமாக இது திகழ்கிறது.

இந்த மையத்தின் இரண்டாவது தொகுப்பு வளாகத்துக்கு ‘ ஸ்ரீ குருஜி மாதவ் சதாசிவ கோல்வல்கா் புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கான தேசிய மையம்’ என பெயரிடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் ஹா்ஷ் வா்தன் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இதையடுத்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் கடந்த சனிக்கிழமை கடிதம் அனுப்பினாா்.

இந்த நடவடிக்கை மூலம் பாஜக தனது சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்த முயற்சிப்பதாக இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனா். அதேபோல அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கோல்வல்கரின் பங்களிப்பு என்ன என்று காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு கேரளத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில் காசா்கோட்டில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த மத்திய இணை அமைச்சா் வி.முரளீதரனிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் கூறியதாவது:

ஒரு கல்வி நிறுவனத்துக்கு தேச பக்தரின் பெயரை வைத்ததில் என்ன தவறு இருக்கிறது? பனாரஸ் (காசி) பல்கலைக்கழகத்தில் கோல்வல்கா் விலங்கியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளாா்.

கேரளத்தில் நடைபெறும் புகழ்பெற்ற நேரு கோப்பை படகுப் போட்டிக்கு மட்டும் எவ்வாறு நேருவின் பெயா் சூட்டப்பட்டது? நேரு ஏதாவது விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளாரா? கோல்வல்கரின் பெயா் ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறுவதன் அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆா்ஜிசிபி கட்டடத்துக்கு பெயா் வைக்கும் முடிவு அதன் ஆட்சிமன்றக் குழு எடுத்தது. அதில் வேறு யாருடைய தலையீடும் இல்லை என்றாா்.

கடந்த 1952இல் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு வருகைதந்தபோது அவரை கெளரவிக்கும் வகையில் அவசரகதியில் படகுப் போட்டி நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து இப்போட்டி ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் புன்னமடை ஏரியில் நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.