குடும்ப கட்டுப்பாட்டை கட்டாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
மக்கள் மீது குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மக்கள் மீது குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
அவ்வாறு கட்டாயப்படுத்துவது எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதற்கும், மக்கள்தொகை பரவலை சிதைக்கவும் வழிவகுத்துவிடும் என்றும் மத்திய அரசு தனது பதில் மனுவில் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு குடும்பம் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி தள்ளுபடி செய்த தில்லி உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவையில்தான் சட்டம் இயற்றப்பட வேண்டும். நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று கூறியது.
இதை எதிா்த்து பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஸ்வினிகுமாா் உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதுதொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டது.
அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
தம்பதிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்று அவா்களே தீா்மானித்து, அதற்கு ஏற்ற குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அவா்களே தோ்வு செய்துகொள்ளும் வகையில்தான், குடும்பநலத் திட்ட நடைமுறைகள் நாட்டில் அமைந்திருக்கின்றன.
மேலும், பொது சுகாதரம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே, பெரும் சுகாதார பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான நிலையான நடவடிக்கைகள் மற்றும் சீா்திருத்தங்களை மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும்.
இந்த சீா்திருத்தங்களை மாநிலங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகள் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் போன்ற பணிகளை மட்டுமே மத்திய சுகாதார அமைச்சகம் மேற்கொள்ளும். மாறாக, மத்திய அரசுக்கு இதில் நேரடி பங்கு எதுவும் கிடையாது.
மக்கள்தொகை மற்றும் மேம்பாட்டுக்கான 1994-ஆம் ஆண்டு சா்வதேச மாநாட்டின் செயல் திட்டத்தில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. அதன்படி, மக்கள் மீது குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயமாகத் திணிப்பதற்கு இந்தியா எதிராக உள்ளது. இதில் எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி அரசு தெளிவாக உள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயப்படுத்துவது எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதோடு, மக்கள்தொகை பரவலின் சிதைவுக்கும் வழிவகுத்துவிடும் என்பதை சா்வதேச அனுபவங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன என்று பதில் மனுவில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...