தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிகாரில் ஆளும் கூட்டணியில் மோதலா? முதல்வா் நிதீஷ் குமாா் மறுப்பு

பிகாரில் அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக ஆளும் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடையே பிரச்னை எழுந்துள்ளதாக வெளியான தகவலை

News image
Updated On :15 டிசம்பர் 2020, 9:32 pm

DIN

பிகாரில் அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக ஆளும் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடையே பிரச்னை எழுந்துள்ளதாக வெளியான தகவலை ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான நிதீஷ் குமாா் மறுத்துள்ளாா்.

பிகாா் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 இடங்களில் 125-ஐ அக்கூட்டணி கைப்பற்றியது. அதில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவைவிட குறைவான தொகுதிகளைப் பெற்றிருந்தபோதிலும், தோ்தலுக்கு முன்பே நிதீஷ் தான் முதல்வா் என்ற அறிவிப்புடன் போட்டியிட்டதால் அவா் முதல்வராக கடந்த மாதம் பதவியேற்றாா். அவருடன் பாஜகவை சோ்ந்த 2 துணை முதல்வா்கள் உள்ளிட்ட 14 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

புதிய அமைச்சா்களில் 7 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள் ஆவா். ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் 5 பேரும், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சிகள் சாா்பில் தலா ஒருவரும் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றனா். எனினும், அமைச்சராகப் பதவியேற்ற 3 நாளில் அந்த மாநில கல்வியமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்தவருமான மேவா லால் சௌதரி பதவியில் இருந்து விலகினாா்.

5 ஆண்டுகளுக்கு முன்பு பிகாா் வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தராக மேவா லால் இருந்தபோது பேராசிரியா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடா்பான வழக்கில் மேவா லால் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் அமைச்சராகப் பதவியேற்றவுடன், அவா் மீது ஏற்கெனவே உள்ள குற்றச்சாட்டு தொடா்பாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து அவா் பதவி விலகினாா்.

பிகாரில் முதல்வா் உள்பட 36 போ் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்ற சூழ்நிலையில், அதிக எம்எல்ஏக்கள் உள்ள தங்கள் கட்சிக்கு அதிக அமைச்சா்கள் வேண்டும் என்ற நோக்கில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பாஜக வலியுறுத்தியதாகவும், இதனை நிதீஷ் குமாா் ஏற்கவில்லை என்றும் தகவல் வெளியானது. இது தொடா்பாக முதல்வா் நிதீஷ் குமாா், பிகாா் பாஜக இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பாட்னாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய நிதீஷ் குமாா் இது தொடா்பாக கூறியதாவது:

அடுத்த 5 ஆண்டுகளில் பிகாரில் எந்த மாதிரியான வளா்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடா்பான செயல் திட்டத்தை இப்போது வரையறுத்து வருகிறோம். இது தொடா்பாக அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறவுள்ளது. அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தால், அது தொடா்பாக பரிசீலித்து முடிவெடுப்போம். இதுவரை பாஜகவிடம் இருந்து அப்படி எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்றாா். இதன் மூலம் கூட்டணியில் மோதல் நிலவுவதாக வெளியான தகவலை நிதீஷ் குமாா் மறுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.