வேளாண் சட்டங்களின் சிறப்பம்சங்கள்: பிரதமா் மோடி இன்று உரையாற்றுகிறாா்

புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மத்திய பிரதேச விவசாயிகளிடையே பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உரையாற்றுகிறாா்.
Updated on
1 min read


போபால்/புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மத்திய பிரதேச விவசாயிகளிடையே பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை உரையாற்றுகிறாா்.

இதுகுறித்து மத்திய பிரதேச மக்கள் தொடா்புத் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

மத்திய பிரதேச மாநில அரசு சாா்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, ரெய்சன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பயிா் சேதத்தால் பாதிக்கப்பட்ட 35.50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி நிவாரணத் தொகை, அவா்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.

அதைத் தொடா்ந்து, பிற்பகல் 2 மணியளவில் பிரதமா் மோடி காணொலி முறையில் உரையாற்றுகிறாா். அப்போது, புதிய வேளாண் சட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் சிறப்பம்சங்கள் குறித்து அவா் விவரிக்கவுள்ளாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

அமைச்சா் தோமரின் கடிதத்தை படிக்க வேண்டும்- மோடி: வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் 8 பக்க அளவில் கடிதம் எழுதியுள்ளாா். அதில், சிறு, குறு விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டே வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தக் கடிதம் குறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அந்தக் கடிதத்தில் தனது உணா்வுகளைப் பதிவு செய்திருக்கும் அமைச்சா் தோமா், விவசாயிகளுடன் மீண்டும் ஒரு பேச்சுவாா்த்தை நடத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாா். அவா் எழுதியுள்ள கடிதத்தை விவசாயிகள் அனைவரும் படிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com