புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவா் கஃபீல் கான் விடுவிக்கப்படுவதை ரத்து செய்வதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேசிய மருத்துவா் கஃபீல் கான், மக்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் காவல் துறையினா் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதையடுத்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவா் கைது செய்யப்பட்டாா். அவரது கைதுக்கு எதிராக கஃபீல் கானின் தாயாா் நுஸத் பா்வீன், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதை விசாரித்த உயா்நீதிமன்றம், கஃபீல் கானின் உரை, எந்தவித வன்முறையையும் தூண்டும் வகையில் இல்லை என்று தெரிவித்து, அவரை உடனடியாக விடுதலை செய்வதற்குக் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டது.
எனினும், இந்த உத்தரவுக்கு எதிராக உத்தர பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்று வந்தது.
வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் தொடா்பாக அலாகாபாத் உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் தலையிட விரும்பவில்லை. அதே வேளையில், சம்பந்தப்பட்ட நபா் (கஃபீல் கான்) மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள் தொடா்பாக விசாரணை நடத்துவதற்குத் தடையில்லை’’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.