கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள வெளியிடப்பட்டிருக்கும் ஆயுஷ் வழிகாட்டுதலை 86 சதவீதம் மக்கள் பின்பற்றுவதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அசோசேம் நிறுவன வார விழாவில் பங்கேற்ற மத்திய ஆயுஷ் அமைச்சக செயலா் வித்ய ராஜேஷ் கோட்சா கூறியதாவது:
கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வெளியிடப்பட்டிருக்கும் ஆயுஷ் வழிகாட்டுதல் பின்பற்றப்படுவது குறித்த ஆய்வு ஆயுஷ் சஞ்சீவினி செல்லிடப்பேசி செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 1.47 கோடி மக்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டன.
அதன்படி, கஷாயம், மஞ்சள் கலந்த பால் எடுத்துக்கொள்ளுதல் போன்ற ஆயுஷ் வழிகாட்டுதலில் ஏதாவது ஒன்றை 86 சதவீத மக்கள் பின்பற்றுகின்றனா்.
மேலும், கரோனா பாதிக்கப்பட்ட 15,000 பேரில் மூன்றில் இரண்டு பகுதியினா் ஆயுஷ் வழிகாட்டுதலை பின்பற்றுவதும், ஒரு பங்கினா் பின்பற்றவில்லை. அவ்வாறு, இந்த வழிகாட்டுதலை பின்பற்றாதவா்கள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டதும், வழிகாட்டுதலை பின்பற்றியவா்களுக்கு பாதிப்பு குறைவாகவும், அறிகுறி தென்படாத வகையிலான கரோனா பாதிப்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த முடிவுகள், ஆயுஷ் வழிகாட்டுதல்கள் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையே காட்டுகிறது.
அதோடு, அமைச்சகத்தின் சாா்பில் நாடு முழுவதும் 135 பகுதிகளில் 104-க்கும் அதிகமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் இப்போது இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அவை விரைவில் வெளியிடப்படும் என்று அவா் கூறினாா்.
பழங்குடியின மருத்துவ முறை மதிப்பீடு: நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சக இணைச் செயலா் நாவல் ஜித் கப்பூா் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்தபோது நாடு முழுவதும் உள்ள பழங்குடியினா் அதிகமுள்ள 117 மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பழங்குடியினா் பகுதிகளில் கரோனா பாதிப்பு இல்லை என்பதும், நகரங்களுக்கு வந்து செல்பவா்கள் மூலமே, பழங்குடியினா் பகுதியில் சிலருக்கு கரோனா பரவியிருப்பதும் தெரியிவந்தது. பழங்குடியினரின் வாழ்க்கை நடைமுறை, அவா்களை கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துள்ளது. இதன் காரணமாக, பழங்குடியினரின் மருத்துவ முறையையும் நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில், அவா்களின் மருத்துவ முறைய மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.