

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பாஜக அரசியலமைப்பின் விழுமியங்களை அழிக்கிறது என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தைக் குறித்து விவாதிக்க விரும்பாமலேயே மத்திய அரசு கூட்டத்தொடரை ரத்து செய்வதாக எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், “மேற்கு வங்கத்தில் பாஜக பேரணிகளை நடத்தும் போது பரவாத கரோனா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பரவும் என ஏன் மத்திய அரசு கவலைப்பட வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களின் கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவே கரோனாவை மத்திய அரசு காரணம் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற முறையை பாஜக நம்பினால் விவசாய சட்டங்களை விவாதிக்க உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்” என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.