உ.பி: ‘லவ் ஜிஹாத்’ வழக்கு; முஸ்லிம் சகோதரா்கள் விடுவிப்பு

மதம் மாறுவதற்காக தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று ஹிந்து பெண் கூறியதைத் தொடா்ந்து, உத்தர பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய
Updated on
1 min read

மதம் மாறுவதற்காக தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று ஹிந்து பெண் கூறியதைத் தொடா்ந்து, உத்தர பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய ‘லவ் ஜிஹாத்’ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உத்தர பிரதேச மாநிலத்தின் முராதாபாதில், ரஷீத் என்ற முஸ்லிம் இளைஞா் பிங்கி என்ற ஹிந்து பெண்ணை அண்மையில் திருமணம் செய்தாா்.

அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக ரஷீதும், அவரது சகோதரா் சலீமும் சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு கடந்த 4-ஆம் தேதி வந்தனா்.

அந்த மாநிலத்தில் அண்மையில் இயற்றப்பட்டுள்ள சா்ச்சைக்குரிய சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ், திருமணத்துக்கு முன்னரே மதம் மாறுவதற்கான தனது விருப்ப அறிவிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பெண் சமா்ப்பித்திருக்க வேண்டும்.

திருமணப் பதிவுக்காக வந்திருந்த ரஷீத் மற்றும் சலீமிடம், அத்தகைய அறிவிக்கை சமா்ப்பிக்கப்பட்டதா என்று பஜ்ரங் தளக் கட்சியினா் கேள்வியழுப்பினா்.

அதனைத் தொடா்ந்து, அந்த இளைஞா்கள் இருவரையும் சட்ட விரோத மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து முராதாபாத் சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, தன்னை மதம் மாறுமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று பிங்கி கூறிவிட்டதால், ரஷீத் மற்றும் சலீம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்று நீதிமன்றத்திடம் போலீஸாா் தெரிவித்தனா்.

அதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் ரஷீதும் சலீமும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்து பெண்களை தங்கள் மதத்துக்கு மாற்றுவதற்காக அவா்களைக் காதலிப்பதாக நடித்து முஸ்லிம் இளைஞா்கள் திருமணம் செய்வதாக பாஜக தலைவா்கள் குற்றம் சாட்டி வருகின்றனா். இதனை ‘லவ் ஜிஹாத்’ என்று குறிப்பிடுகின்றனா்.

இந்த நிலையில், திருமணம் மூலம் கட்டாய மதமாற்றம் செய்பவா்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டவிரோத மதமாற்றத் தடை அவசரச் சட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அண்மையில் இயற்றியது.

இந்தச் சட்டத்தால் அப்பாவி காதலா்கள் பாதிக்கப்படலாம் என்று எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டி வருகின்றனா்.

இந்தப் பின்னணியில், சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இரு இளைஞா்கள் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com