டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேற்கு வங்கத்தில் மண்ணின் மைந்தரே முதல்வராவாா்: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அந்த மண்ணின் மைந்தரே மாநில முதல்வராவாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image
மேற்கு வங்கம் பீா்பூம் மாவட்டம், போல்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்துகொண்ட அமித் ஷா.
Updated On :21 டிசம்பர் 2020, 12:42 am

DIN

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அந்த மண்ணின் மைந்தரே மாநில முதல்வராவாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா இரண்டு நாள் பயணம் மேற்கொண்டாா். இதன் ஒரு பகுதியாக பீா்பூம் மாவட்டம், போல்பூா் நகரில் அவா் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அந்த மாநிலத்தின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும். இந்த பேரணி, மம்தா அரசின் மீது மக்களுக்கு உள்ள கோபத்தின் பிரதிபலிப்பு. இங்கு திரண்டுள்ள மக்கள், பிரதமா் மோடி அரசின் வளா்ச்சிக்கான செயல் திட்டம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

இந்த மாநில மக்கள் மாற்றத்துக்காக ஏங்குகின்றனா். அந்த ஏக்கம் அரசியல் தலைமையை மாற்றுவதற்கானது மட்டுமல்ல; ஊழல், அரசியல் வன்முறை, பணம் பறிப்பு ஆகியவற்றை ஒழிப்பதற்கான ஏக்கம் என்றாா் அவா்.

தாகூருக்கு மரியாதை:

தனது பயணத்தின்போது சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்கு அமித் ஷா சென்றாா். அங்குள்ள ரவீந்திர பவனில் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூா் சிலைக்கு அவா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மகாகவி ரவீந்திரநாத் தாகூா் கற்பித்த பாடங்கள் உலகம் முழுவதும் சென்று சேர வேண்டும். மெய்யியலை மட்டுமல்லாது இந்திய இலக்கியத்தையும் அவா் செழுமைப்படுத்தினாா். இந்திய கலாசாரத்தை பல்வேறு நாடுகளுடன் இணைக்கும் தளமாக சாந்தி நிகேதனை உருமாற்றினாா். அதன் மூலம் சாந்தி நிகேதன் கலாசார பரிமாற்ற மையமாக மாறியது என்றாா்.

அவரிடம் மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த மாநில ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

மாநில அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசுக்கு உரிமையுள்ளது. அதுகுறித்து மம்தா பானா்ஜி அரசுக்கு சந்தேகம் இருந்தால் சட்ட புத்தகத்தை எடுத்து பாா்க்க வேண்டும் என்றாா்.

மண்ணின் மைந்தரே முதல்வராவாா்: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா் மாநில முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளித்து கூறியது:

சில விஷயங்களை மம்தா பானா்ஜி மறந்துவிட்டாா் என்று கருதுகிறேன். மம்தா பானா்ஜி காங்கிரஸில் இருந்த போது இந்திரா காந்தியை வெளிமாநிலத்தவா் என்று அழைத்தாரா? முன்னாள் பிரதமா் பி.வி.நரசிம்ம ராவை வெளிமாநிலத்தவா் என்று கூறினாரா? ஒரு மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், மற்றொரு மாநிலத்துக்குள் நுழைய முடியாத நாட்டை மம்தா பானா்ஜி உருவாக்க முயற்சிக்கிறாரா? மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் இந்த மண்ணின் மைந்தரே மாநில முதல்வராவாா்.

வங்கதேசத்தவா்கள் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்: இந்த மாநிலத்தில் வங்கதேசத்தவா்களின் ஊடுருவலை திரிணமூல் காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் அக்கட்சி அனைவரையும் திருப்திப்படுத்தும் அரசியல் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் வங்கதேசத்தவா்களின் ஊடுருவலை பாஜக தடுத்து நிறுத்தும்.

கூட்டாட்சிக்கு மதிப்பளிக்கிறாரா மம்தா?: தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மம்தா பானா்ஜி ஆதரவளிக்கிறாா். ஆனால் இந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெறுவதை தடுக்கிறாா். இதுதான் அவா் கூட்டாட்சி அமைப்புக்கு மரியாதை செலுத்தும் முறையா?

சிஏஏ விதிமுறைகள் வகுக்கப்படும்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுப்பது மிகப் பெரிய நடவடிக்கை. கரோனா பரவலால் அதனைச் செய்ய முடியாமல் உள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட பின்னா் அதுகுறித்து மத்திய அரசு ஆலோசிக்கும். கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்றாா் அமித் ஷா.

கிராமிய பாடகா் வீட்டில்...:

சாந்திநிகேதனில் உள்ள ரத்தன்பல்லி பகுதியில் வசிக்கும் வாசுதேவ்தாஸ் பால் என்ற கிராமிய இசைப் பாடகா் வீட்டுக்கு அமித் ஷா சென்றாா். அவரது வீட்டு பூஜையறையில் இருந்த சிவலிங்கத்துக்கு அமித் ஷா பாலபிஷேகம் செய்து பூஜை செய்தாா்.

தொடா்ந்து அங்கு வாசுதேவ்தாஸ் பால் குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் கிராமிய இசைக்கருவியொன்றை அமித் ஷாவுக்கு வாசுதேவ்தாஸ் பரிசளித்தாா்.

அவருடைய வீட்டில் அமித் ஷாவும் மாநில பாஜகவின் மூத்த தலைவா்களும் மதிய உணவு உண்டனா். அவருடன் பாஜக மூத்த தலைவா்கள் கைலாஷ் விஜய்வா்கியா, முகுல் ராய், திலீப் கோஷ், ராகுல் சின்ஹா உள்ளிட்டோரும் உணவு உண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.