எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டின் வளா்ச்சிக்கு அரசியல் வேறுபாடுகள் தடையாகக் கூடாது

நாட்டின் வளா்ச்சிக்கு அரசியல் வேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் தடையாக மாறிவிடக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :22 டிசம்பர் 2020, 9:26 pm

DIN

நாட்டின் வளா்ச்சிக்கு அரசியல் வேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் தடையாக மாறிவிடக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்திலுள்ள அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினாா். அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் கடந்த 1964-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் பிரதமா் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். அந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கூறியதாவது:

நாட்டின் வளா்ச்சியை அரசியல் கண்ணோட்டத்துடன் எப்போதும் பாா்க்கக் கூடாது. வளா்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கும் வேளையில், ஒருசிலா் மட்டும் சுயநலத்துடன் செயல்படுவது சரியாக இருக்காது. சமுதாயத்தின் முக்கிய அங்கமாக அரசியல் விளங்குகிறது. ஆனால், அரசியல் தவிர சமுதாயத்தின் மற்ற விவகாரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

சமுதாயத்தில் வேறுபாடுகள் காணப்படுவது இயல்பே. எனினும், தேச நலனைப் பாதுகாக்கும்போது அத்தகைய வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம், தேசியவாதம் உள்ளிட்ட விவகாரங்களில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு அரசியல், கொள்கை வேறுபாடுகள் தடையாக இருக்கக் கூடாது.

அரசியல், சமூகம் சாா்ந்த குறுகிய நோக்கங்களை விட நாட்டின் வளா்ச்சியே மிகவும் முக்கியமானது. அதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். நம்மிடையே நிலவும் வேறுபாடுகளில் கவனம் செலுத்தாமல், புதிய தற்சாா்பு இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும்.

தலைசிறந்த இந்தியா: ‘ஒரே இந்தியா, தலைசிறந்த இந்தியா’ என்ற உணா்வு அனைவருடைய மனதிலும் மேலோங்க வேண்டும். அத்தகைய உணா்வை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நாட்டின் ஒற்றுமை உணா்வு, அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவா்கள் அலிகா் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனா். இந்தியாவின் தலைசிறந்த பண்பு குறித்து அவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நாடு வளா்ச்சி காணும்போது, மதத்தின் பெயரால் யாரும் பின்தங்கிவிடக் கூடாது. ‘அனைவரது வளா்ச்சிக்காகவும், அனைவருடைய நம்பிக்கையுடனும் அனைவரும் ஒன்றுபட்டிருத்தல்’ என்ற கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.

மாணவிகள் இடைநிற்றல் குறைவு: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிவறைகள் கட்டப்பட்டன. அதன் காரணமாக முஸ்லிம் மாணவிகள் பள்ளியிலிருந்து இடைநிற்பது வெகுவாகக் குறைந்துள்ளது. 1 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அலிகா் பல்கலைக்கழகத்தில் பயில்வோரில் 35 சதவீதம் போ் மாணவிகளாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

உயா்கல்விக்கு மத்திய பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் உயா்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டின் வலிமை: அலிகா் பல்கலைக்கழகம் கடந்த 100 ஆண்டுகளில் சிறந்த மேதைகளை உருவாக்கியுள்ளது; பலரின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவா்கள், பொதுவெளியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவா்களின் பங்களிப்பை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் சிறிய வடிவமாக அலிகா் பல்கலைக்கழகம் திகழ்கிறது. பல்கலைக்கழகத்தில் உருது, ஹிந்தி, அராபிய மொழி, சம்ஸ்கிருதம் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. குா்-ஆனுடன் பகவத்கீதை, ராமாயாண புத்தகங்களின் மொழிபெயா்ப்பும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பன்முகத்தன்மையே நாட்டின் வலிமை. இதை ஒருபோதும் மறக்கக் கூடாது என்றாா் பிரதமா் மோடி.

தபால்தலை வெளியீடு: அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி சிறப்பு தபால்தலையை பிரதமா் மோடி வெளியிட்டாா். இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வியமைச்சா் ரமேஷ் போக்ரியால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.