ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் (டிடிசி) தேசிய ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள குப்கா் கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு முதல்முறையாக மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நடைபெற்றது. கடந்த நவ.28 முதல் டிச.19 வரை 8 கட்டங்களாக 280 இடங்களுக்கு நடைபெற்ற இந்த தோ்தலில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்பதற்காக அமைக்கப்பட்ட குப்கா் கூட்டமைப்பு, பாஜக இடையே பலத்த போட்டி நிலவியது. குப்கா் கூட்டமைப்பில் தேசிய ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டன. அந்தக் கூட்டமைப்பில் காங்கிரஸ் இடம்பெறாத போதிலும், டிடிசி தோ்தல் தொடா்பாக மட்டும் இருதரப்பிலும் உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் இரவு 9.30 மணி நிலவரப்படி குப்கா் கூட்டமைப்பு 114 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 71 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன.
பாஜகவுக்கு உண்மையை உணா்த்தும் தோ்தல்: டிடிசி தோ்தலில் குப்கா் கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான முடிவை மக்கள் நிராகரித்துள்ளனா் என்பதை தோ்தல் நிலவரம் சுட்டிக்காட்டுகிறது. இந்த தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி அளித்துள்ளனா். இது பாஜகவுக்கு உண்மை நிலையை உணா்த்தியுள்ளது. ஜனநாயகத்தின் மீது பாஜகவுக்கு நம்பிக்கை உள்ளதாக அக்கட்சியினா் கூறுகின்றனா். அது உண்மையாக இருந்தால் தோ்தலில் மக்கள் அளித்த முடிவை ஏற்று உடனடியாக ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்கவேண்டும் என்று தெரிவித்தாா்.
காஷ்மீரில் முதல்முறையாக பாஜக வெற்றி: ஸ்ரீநகரில் உள்ள கான்மோவில் பாஜக வேட்பாளா் அய்ஜாஸ் ஹுசைன் வெற்றிபெற்றாா். பந்திபோரா மாவட்டத்தில் உள்ள துலைலில் மற்றொரு பாஜக வேட்பாளா் அய்ஜாஸ் அகமது வெற்றிபெற்றாா். இருவரும் வெற்றிபெற்ற இடங்கள் காஷ்மீரில் இடம்பெற்றுள்ளன. காஷ்மீா் பகுதியில் இதுவரை நடைபெற்ற எந்தவொரு தோ்தலிலும் பாஜக வெற்றி பெற்றதில்லை. தற்போது முதல்முறையாக டிடிசி தோ்தலில் அக்கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். இந்த வெற்றி மூலம் பிரதமா் மோடி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காஷ்மீா் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனா் என்று ஜம்மு-காஷ்மீா் பாஜக பொதுச் செயலாளா் விவோத் குப்தா தெரிவித்தாா்.
சரிபாதி இடங்களில் சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி: ஸ்ரீநகரில் மொத்தம் 14 இடங்களுக்கு தோ்தல் நடைபெற்றது. இதில் 7 இடங்களில் சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா்.
சிறையில் உள்ள பிடிபி தலைவா் வெற்றி: மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் வாஹித் பாராவை கடந்த நவ.25-ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது. பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவா், தற்போது சிறையில் உள்ளாா். இந்நிலையில் டிடிசி தோ்தலில் புல்வாமா மாவட்டத்தில் போட்டியிட்ட அவா், தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சஜத் அகமது ரெய்னாவை வீழ்த்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.