குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்: அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம்

"வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்குவது என்பது அரசின் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. அதை அரசு தொடர்ந்து வழங்கும்'
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்: அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம்
Updated on
1 min read

"வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்குவது என்பது அரசின் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. அதை அரசு தொடர்ந்து வழங்கும்' என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரோந்திர சிங் தோமர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 தில்லி தெற்காசிய வெளிநாட்டு நிருபர்கள் மன்ற உறுப்பினர்களுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:
 வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. இந்தியாவில் வேளாண்மை என்பது பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றதாகும். மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. மூன்று புதிய வேளாண் சட்டங்களும் மிகப் பெரிய விவசாயச் சீர்திருத்தங்களைக் கொண்டது. இதுபோன்ற சீர்திருத்தங்களை நாடு இதுவரைக் கண்டதில்லை. விவசாயிகளுக்கு சந்தை சுதந்திரம், தொழில்முனைவோராவதை ஊக்குவித்தல், தொழில்நுட்பத்தை அணுகுதல் போன்றவற்றை இந்தச் சட்டங்கள் வழங்குகின்றன.
 ஒரே இரவில் முடிவு எடுக்கப்பட்டு இந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டதல்ல. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல விவாதங்களுக்குப் பிறகு நிபுணர்கள், பல்வேறு குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டவை. கடந்த ஆறு ஆண்டுகளில் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்து வந்துள்ளது. உணவுப் பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து உணவுப் பொருள்கள் உபரி என்கிற நிலையை நாம் அடைந்துள்ளோம். எனவே, பொருளாதாரத்தின் முதுகெலும்பான இந்தத் துறையை மேம்படுத்துவதற்கு விவசாயிகள் சார்பு சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை அரசு உணர்ந்திருந்தது.
 ஏற்கெனவே, பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தை மத்திய அரசு 2019,பிப்ரவரியில் அறிமுகப்படுத்தி ஆண்டுக்கு ரூ 6,000 வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 10.59 கோடி விவசாயக் குடும்பங்கள் ரூ.95,979 கோடியைப் பெற்று பயனடைந்துள்ளன. வேதிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்து மேம்பட்ட மண்ணின் ஆரோக்கியத்துடன் கூடிய பயிர் விளைச்சல், யூரியாவின் பயன்பாட்டைக் குறைத்தல் போன்றவற்றுக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது.
 மேலும், வேளாண் உற்பத்தியை ஊக்கவிக்க ரூ. 6,865 கோடியில் 5 ஆண்டுகளில் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்று விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, விவசாயத்தில் ஒரு புதிய சகாப்தத்தை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. போராடும் விவசாயச் சங்கங்களுடன் அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. மேலும், வேளாண் சட்டங்களில் உள்ள ஒவ்வொரு உட்பிரிவு வாரியாக திறந்த மனதுடன் பேச்சுவார்த்தையைத் தொடர அரசு தயாராக உள்ளது என்றார் தோமர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com