தில்லி கலவரத்தை பாஜக தலைவர் தூண்டியதாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள்: புதனன்று விசாரணை
தில்லி கலவரத்தை பாஜக தலைவர் தூண்டியதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதனன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கபில் மிஸ்ரா

கபில் மிஸ்ரா
புது தில்லி: தில்லி கலவரத்தை பாஜக தலைவர் தூண்டியதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதனன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திங்கள் மாலை ஏற்பட்ட மோதல் வன்முறையாகியதில், போலீஸ் தலைமைக் காவலர் ஒருவர் உள்பட 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர தில்லி காவல்துறை போராடி வருகிறது.
தில்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் கபில் மிஸ்ரா. ஜாஃபர்பாத் பகுதியில் உள்ள மௌஜ்பூர் சௌக்கில் சிஏஏ-வுக்கு ஆதரவான குழுவினரை கபில் மிஸ்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிநடத்தினார். இதன்பிறகே, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கபில் மிஸ்ரா தில்லி காவல் துறையினருக்கு கெடு விதிக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுரைப் பதிவில் கருத்து தெரிவித்தார். அதில், "ஜாஃப்ராபாத் மற்றும் சந்த் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தில்லி காவல் துறையினருக்கு மூன்று நாள் வழங்கப்படுகிறது. இதன்பிறகும், காரணம் கூறி நியாயப்படுத்த முயற்சிக்காதீர், நாங்கள் செவிசாய்க்க மாட்டோம்" என்றார்.
மேலும் விடியோவுடன் கூடிய பதிவில் அவர் குறிப்பிடுகையில், "டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருக்கும் வரையே நாங்கள் அமைதி காப்போம். அதற்குப் பிறகும் சாலைகள் திறக்கப்படவில்லை என்றால் காவல் துறையினர் சொல்வதைக்கூட கேட்க மாட்டோம். நாங்கள் சாலைகளில் இறங்கி அடித்து நொறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்" என்றார்.
கபில் மிஸ்ராவின் இந்தப் பேச்சு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, தில்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அவரே திங்கள்கிழமை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "வன்முறை தீர்வைக் காணாது. அனைவரும் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். சிஏஏ-வுக்கு ஆதரவானவர்களாக இருந்தாலும் சரி, எதிரானவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தில்லியின் சகோதரத்துவத்துக்கு எவ்வித இழுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது" என்றார்.
இந்நிலையில் தில்லி கலவரத்தை பாஜக தலைவர் தூண்டியதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் புதனன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் ஆசாத் மற்றும் முன்னாள் தலைமைத் தகவல் ஆணையர் வஜஹத் ஹபிபுல்லாஹ் மற்றும் பலர் இத்தகைய மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களது மனுக்களில் தில்லி வன்முறை தொடர்பாக 23-ஆம் தேதியன்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட போதும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சமூக விரோதிகள் தில்லிக்குள் ஊடுருவி இங்குள்ளவர்களைத் தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஷஹீன் பாக் பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு பல்வேறு விதமான மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக புதனன்று விசாரிக்கத் திட்டமிட்டுள்ள ஷஹீன் பாக் தெடர்பான இரண்டு மனுக்களுடன் இந்த மனுக்களையும் இணைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
இந்த மனுக்களை அவசர மனுக்களாக விசாரிக்க கோரி நீதிபதிகள் சஞ்சய் கிசன் கவுல் மற்றும் ஜோசப் அடங்கிய அமர்வு முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...