தில்லி வன்முறையின் மிகக்கோர முகம் இதோ

வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வன்முறை ஏற்பட்டது.
தில்லி வன்முறையின் மிகக்கோர முகம் இதோ
Updated on
1 min read


புது தில்லி: வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைகளால் இதுவரை மொத்தம் 18 பேர் உயிரிழந்துவிட்டதாக ஜிடிபி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.  இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் 11 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் குண்டடிபட்டு அபாய நிலையில் உள்ளார். 

இந்த நிலையில், தில்லியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் தனது கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, கடைக்குள் புகுந்த வன்முறையாளர்கள், அங்கிருந்த துளையிடும் இயந்திரத்தின் மீது அவரது தலையை இடித்த போது, அங்கிருந்த இயந்திரம் தலையை துளைபோட்டுக் கொண்டு சென்றது.

படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தலையில் சிக்கியிருக்கும் கூர்மையான பகுதியும் எக்ஸ்ரே புகைப்படமும் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

தில்லியில் நடந்து வரும் வன்முறையின் கோர முகமாகவே இது பார்க்கப்படுகிறது.

சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு திடீரென சாலை மறியல் தொடங்கியது. இப்போராட்டத்துக்கு பதிலடியாக ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவுப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் திங்கள்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் வன்முறை நீடித்தது. இதன் காரணமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மெளஜ்பூர், பிரம்மபுரி, கஜோரி காஸ், பஜன்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறைப் பகுதிகளில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். எனினும், ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து ஏற்பட்டது. வன்முறையாளர்கள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும், பொது சொத்துகளுக்கும் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் சாலைகள் முழுவதும் கற்கள் சிதறிக் கிடந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com