ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களா? பதவியை ராஜிநாமா செய்த தெலுங்கு தேசம் கட்சி மேலவை உறுப்பினர்

ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை ஏற்படுத்தும் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி மேலவை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
டோக்கா மாணிக்ய வரப்ரசாத் ராவ்
டோக்கா மாணிக்ய வரப்ரசாத் ராவ்

அமராவதி: ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை ஏற்படுத்தும் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி மேலவை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஆந்திராவில் முன்பு ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசானது அமராவதியை புதிய தலைநகராக்கி அதற்கென பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்தது.

ஆனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி, அதற்குப் பதிலாக ஆந்திராவிற்கு அமராவதியுடன் சேர்த்து குர்நூல் மற்றும் விசாகப்பட்டினம் என மூன்று தலைநகரங்களை உண்டாக்கும் திட்டத்தை முன்வைத்தார். இதற்கான மசோதாக்கள் திங்கள் அன்று மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  அதையடுத்து செவ்வாயன்று சட்ட மேலவையிவ் இந்த மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி மேலவை உறுப்பினர்  ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தெலுஙகு தேசம் கட்சியின் முக்கியத் தலைவரம், மேலவை உறுப்பினருமான டோக்கா மாணிக்ய வரப்ரசாத் ராவ் தனது பதவியை செவ்வாயன்று ராஜிநாமா செய்துள்ளார். இவர் தனது ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளார்களிடம் பேசிய அவர், அமராவதி தலைநகருக்கான  முக்கியத்துவத்தை  இழந்து, முக்கிய செயல்பாடுகள் மற்ற இரண்டு நகரங்களுக்கு மாற்றப்படுவது தனக்கு மிகுந்த வலி தருவதாகத் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com