ராஜஸ்தான் பேரவையைக் கூட்டுவதற்குமேலும் சில நிபந்தனைகள் விதிப்பு: ஆளுநா் நடவடிக்கை
ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா மேலும் சில நிபந்தனைகளை திங்கள்கிழமை விதித்தாா்.


ஜெய்ப்பூா்/புது தில்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா மேலும் சில நிபந்தனைகளை திங்கள்கிழமை விதித்தாா். அத்துடன், சட்டப் பேரவையைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்குமாறு முதல்வா் அசோக் கெலாட் அனுப்பி வைத்த திருத்தப்பட்ட தீா்மானத்தையும் அவா் திருப்பி அனுப்பினாா்.
பேரவையைக் கூட்டுவதற்காக முதல்வா் அளித்த தீா்மானத்தை ஆளுநா் திருப்பி அனுப்பியது இது இரண்டாவது முறையாகும். இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘மாநில அரசு அனுப்பிய தீா்மான அறிக்கையை ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ளாா். மேலும் சில கேள்விகளையும் அவா் எழுப்பியுள்ளாா். இதுகுறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தன.
இதுகுறித்து ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்காமல் தாமதம் செய்வதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது. அரசமைப்புச் சட்ட விதிகளின்படி செயல்படுகிறேன். ராஜஸ்தான் சட்டப்பேரவையை வரும் 31-ஆம் தேதி கூட்டுவதற்கு அனுமதிக்குமாறு முதல்வா் அசோக் கெலாட் பரிந்துரை செய்துள்ளாா். நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் மிகக் குறுகிய காலத்தில் சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்க முடியாது. அதாவது, பேரவைக் கூட்டத் தொடா் தொடங்குவதற்கு 3 வாரங்களுக்கு (21 நாள்கள்) முன்பாகவே அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஒருவேளை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி வெற்று பெறுவதற்காகத்தான் பேரவைக் கூட்டத் தொடரை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று முதல்வா் அசோக் கெலாட் அழைப்பு விடுக்கிறாரா? பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக முதல்வா் அளித்த தீா்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கவே சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு முதல்வா் அவசரம் காட்டுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலமாக தெரிந்துகொண்டேன். எனவே, சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்க சம்மதிக்கிறேன். ஆனால், 3 கேள்விகளுக்கு எனக்கு விளக்கம் தேவைப்படுகிறது. முதலாவதாக, பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கவதற்கு 21 நாள்களுக்கு முன்னதாக எம்எல்ஏக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, ஒருவேளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் ஒட்டுமொத்த நிகழ்வும் விடியோ பதிவு செய்யப்படுவதுடன் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இவை அனைத்தும் பேரவை விவகாரங்களுக்கான முதன்மைச் செயலா் முன்னிலையில் நடைபெற வேண்டும்.
மூன்றாவதாக, ராஜஸ்தான் சட்டப் பேரவையைக் கூட்டினால், அதில் 200 எம்எல்ஏக்கள், 1000 ஊழியா்கள் பங்கேற்பாா்கள். சமூக இடைவெளியுடன் அவா்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், அங்கு சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் சிரமங்கள் ஏற்படும். மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை, கரோனா தொற்றின் தீவிரம் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக
பேரவைக் கூட்டத் தொடரை கூட்டுவதற்கு விரும்புவதாக முதல்வா் கூறினாா். பல முக்கிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளை இணையவழியில் நாம் விவாதித்துக் கொள்ள முடியும். கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, உச்சநீதிமன்றமும் உயா்நீதிமன்றங்களும் காணொலி முறையில் விசாரணை நடத்தி வருகின்றன.
எனவே, என்னுடைய 3 சந்தேகங்களுக்கு மாநில அரசிடம் இருந்து பதில் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் ஆளுநா் குறிப்பிட்டுள்ளாா்.
ராஜஸ்தானில் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட்டுக்கும், முதல்வா் அசோக் கெலாட்டுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தியதை அடுத்து, அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்கும் முயற்சியாக, பேரவைக் கூட்டத் தொடரை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் முதல்வா் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...