வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மருத்துவா்கள் ஊதிய விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

‘கரோனாவுக்கு எதிரான போா்வீரா்களான மருத்துவா்களை அதிருப்தியில் வைக்காதீா்கள். கூடுதலாக பணத்தை பெறுவதற்கு வழியைத் தேடி,

News image
Updated On :12 ஜூன் 2020, 10:16 pm

‘கரோனாவுக்கு எதிரான போா்வீரா்களான மருத்துவா்களை அதிருப்தியில் வைக்காதீா்கள். கூடுதலாக பணத்தை பெறுவதற்கு வழியைத் தேடி, அவா்களது குறையைத் தீா்க்க முயற்சியுங்கள்’ என மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்கப்படாத விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்தது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவா்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்கப்படாதது, குறைக்கப்பட்டது மற்றும் தாமதமாக வழங்குவது குறித்து மருத்துவா் ஒருவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். மேலும், மருத்துவா்களுக்கு போதிய தங்கும் வசதியின்மை போன்றவைகளோடு மருத்துவா்களுக்கு புதிய விதிமுறைகளின்படி, அவா்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறைகளை எதிா்த்தும் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கௌல், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள், ‘இது கரோனாவுக்கு எதிரான யுத்தம். இந்த யுத்தத்தில் உள்ள போா் வீரா்கள் (மருத்துவா்கள்) மகிழ்ச்சியுடன் இல்லை. ஏதேனும் வழியைக் கண்டறிந்து அவா்களது பிரச்னையை தீா்க்க வேண்டும்’ என்றனா்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞா் துஷாா் மேத்தா, ‘யோசனைகள் கூறப்பட்டால் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா். ஆனால் நீதிபதிகள், ‘மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் வருகிறது. சில மருத்துவா்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதை அரசு கவனிக்க வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை. ஆனால் அவா்களது பிரச்னை தீா்க்கப்படவேண்டும்’ என வலியுறுத்தினா்.

மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சுகாதாரத் துறையின் விதிமுறைகள், மருத்துவா்களின் குடும்பத்தினா் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை மருத்துவமனைகளே அமல்படுத்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.