லடாக்: இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்ய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே இன்று கிழக்கு லடாக் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இந்திய - சீன ராணுவப் படையினருக்கு இடையேயான மோதலில் காயமடைந்து, லேஹ் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய ராணுவ வீரர்களை ராணுவ தலைமை தளபதி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
கிழக்கு லடாக் பகுதியில் இரண்டு நாள்கள் தங்கியிருந்து, அங்கு ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் எம்.எம். நரவணே திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் இந்தியா - சீனா சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே நேரிட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 76 வீரர்கள் காயமடைந்தனர்.