தில்லி வன்முறை விவாதமும்.. நாடாளுமன்ற ஒத்திவைப்பும்..
மக்களவையில் தில்லி வன்முறை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருப்பதால் இன்று (செவ்வாய்கிழமை) மூன்றாவது முறையாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.


மக்களவையில் தில்லி வன்முறை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருப்பதால் இன்று (செவ்வாய்கிழமை) மூன்றாவது முறையாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
தில்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர், 260-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு முன்பு தெரிவித்ததுபோல் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தில்லி வன்முறை குறித்து எழுப்பியது. இந்த கடும் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிர்க்கட்சிகள் இன்றும் தில்லி வன்முறை பிரச்னையையே கையிலெடுத்தன. இதனால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இரு அவைகளிலும் மீண்டும் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவை மூன்று முறையும், மக்களவை இரண்டு முறையும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை:
காலை முதல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவிக்கையில், "மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினேன். ஹோலி பண்டிகைக்குப் பிறகு மார்ச் 11-ஆம் தேதி தில்லி வன்முறை குறித்து விவாதிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது" என்றார். இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி, தில்லி வன்முறை குறித்து உடனடியாக விவாதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வங்கிகள் ஒழுங்குமுறை மசோதா (சட்டத் திருத்தம்) மீது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோதும், எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஓம் பிர்லா, "நீங்கள் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தீர்கள், ஹோலிக்குப் பிறகு விவாதிக்கலாம் என மத்திய அரசு சம்மதம் தெரிவித்துவிட்டது. எனவே, அனைவரும் உங்களுடைய இருக்கைகளுக்குச் சென்று விவாதத்தின் மீதும், மற்ற விவகாரங்கள் மீதும் கவனம் செலுத்துங்கள்" என்றார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தில்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட, மக்களவையை மூன்றாவது முறையாக ஒத்திவைத்தார் ஓம் பிர்லா.

மாநிலங்களவை:
மாநிலங்களை பிற்பகல் 2 மணிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கூடியது. அப்போது முதன்மை எதிர்க்கட்சியா காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் தில்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவிக்கையில், அவைத் தலைவர் தீர்மானிக்கும் நேரத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என்றார். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து அவை நடவடிக்கைகளைக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதன் காரணமாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் 3 மணி வரை மாநிலங்களவையை ஒத்திவைத்தார். முன்னதாக, எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டதால் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...