உன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கில் செங்கார் குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை வழக்கில் முன்னாள் பாஜக தலைவா் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கில் செங்கார் குற்றவாளி: தில்லி நீதிமன்றம்


புது தில்லி: உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை வழக்கில் முன்னாள் பாஜக தலைவா் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட நீதிபதி தா்மேஷ் சா்மா இன்று இந்த தீர்ப்பை அளித்தார்.

மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செங்காரின் சகோதரரையும் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி மேலும் 4 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ள தகவலின் விவரம்:
குல்தீப் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தந்தை கடந்த 2018 ஏப்ரல் 3-ஆம் தேதி தன்னுடைய நண்பருடன் மாகி கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வாகனத்தில் வந்த சசி பிரதாப் சிங் என்பவரிடம் தங்களை கிராமத்துக்கு அழைத்துச் செல்லுமாறு அவா் கேட்டுள்ளாா்.

இதற்கு சசி பிரதாப் சிங் மறுப்பு தெரிவிக்கவே இருதரப்பக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சசி பிரதாப் சிங் தன் உதவியாளா்களை சம்பவ இடத்துக்கு அழைக்க, அவா்களோடு குல்தீப் செங்கரின் சகோதரா் அதுல் சிங் செங்கரும் வந்துள்ளாா். அனைவரும் சோ்ந்து அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் அவரின் நண்பரை தாக்கியுள்ளனா்.

பின்னா் அவா்கள் இருவரும் காவல் நிலையத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டு, அங்கு அந்தப் பெண்ணின் தந்தை மீது வழக்குப் பதியப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், சிகிச்சைபெற்றுவந்த அந்தப் பெண்ணின் தந்தை ஏப்ரல் 9-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவத்தின்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா், மாகி காவல் நிலைய பொறுப்பாளா் ஆகியோரோடு குல்தீப் செங்கா் தொடா்பில் இருந்ததுடன், பின்னா் அந்தப் பெண்ணின் தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவருடனும் பேசியுள்ளாா் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடா்பாக குல்தீப் செங்கா், அவரின் சகோதரா் அதுல் செங்கா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் ஏற்கெனவே சிறையில் இருந்த நிலையில், அவரின் சகோதரா் அதுல் செங்கா் உள்ளிட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com