ஊரடங்கு: 'கிராமப்புறங்களில் 50 சதவிகிதத்தினர் குறைந்த அளவே சாப்பிடுகின்றனர்'
ஊரடங்கு காலத்தில் கிராமப்புறங்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே உணவருந்துகின்றனர் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.


ஊரடங்கு காலத்தில் கிராமப்புறங்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் வழக்கத்தை விட குறைந்த அளவே சாப்பிடுகின்றனர் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 3வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 4வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பும் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், சில சமூக அமைப்புகள் இணைந்து 12 மாநிலங்களில் 5,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அவர்களில் பாதிப் பேர் இந்த ஊரடங்கு காலத்தில் குறைவான உணவையே உண்ணுவது தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள 68% குடும்பங்கள் தங்கள் அன்றாட உணவில் உணவுப் பொருட்களைக் குறைத்துள்ளதாகவும், 50% குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு உணவருந்தும் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும், 24% குடும்பங்கள் உணவு தானியங்களை கடன் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
84% குடும்பங்கள், அரசின் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ரேஷன் பொருள்கள் பெறுவதாகக் கூறினாலும், ஆறில் ஒரு பங்கு குடும்பம் இன்னும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. காரீப் பருவம் வருவதையொட்டி, ரேஷன் பொருள்கள் வழங்குதல் மற்றும் தானியங்கள் குறித்த முதலீடுகளில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
ஏப்ரல் 28 முதல் மே 2 வரை, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், குஜராத், பிகார், அசாம் மற்றும் கர்நாடகம் என 12 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் உள்ள 5,162 வீடுகளில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
சமூக முன்னேற்ற நடவடிக்கை அமைப்பான பிரதான், டிரான்ஸ்ஃபார்ம் கிராமப்புற இந்திய அறக்கட்டளை, கிராமின் சஹாரா, சாதி-உ.பி. மற்றும் விகாஸ் அன்வேஷ் அறக்கட்டளை இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
மூன்றில் ஒரு பகுதியினருக்கும் அதிகமானோர், கடந்த ஆண்டு காரீப் பருவத்தில் இருந்தே தங்களிடம் உபரி தானியங்கள் இல்லை என்றும், மூன்றில் ஒரு பகுதியினர் மட்டும், தங்களிடம் உள்ள தானியங்கள் மே இறுதி வரை மட்டுமே நீடிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஆய்வில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வரவிருக்கும் காரீப் பருவத்துக்கு விதைக்க தேவையான விதைகள் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால், கிட்டத்தட்ட பாதிப் பேர் பயிர் கடன்களைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கிட்டத்தட்ட 22% குடும்பங்கள் தங்கள் உறவினர்களிடம் இருந்தும், 16% குடும்பங்கள் வெளியிலும் கடன் வாங்கியுள்ளனர். 22% பேர் பணத்திற்காக தங்கள் கால்நடைகளை விற்றுள்ளனர். 14% பேர் தங்கள் வீட்டுப் பொருட்களை அடமானம் வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, கிராமப்புற குழந்தைகளின் கல்வியில் இந்த பொதுமுடக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. கிட்டத்தட்ட 29% குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்துவதை கண்டுகொள்வதில்லை என்று கூறியுள்ளனர்.
அதேபோன்று, கணக்கெடுக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இந்த சமயத்தில் பெண்களுக்கு கூடுதல் வேலைகள் இருப்பதையும் ஆய்வு உறுதி செய்துள்ளது.
மேலும், ஏறக்குறைய 62% வீடுகளில் உள்ள பெண்கள், அதிக தூரம் சென்று தண்ணீர் எடுப்பதாகவும், 68% வீடுகளில் பெண்கள் எரிபொருள் விறகுகளை சேகரிப்பதில் அதிக நேரம் செலவழித்து வருவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...