இடுக்கியில் ஏலக்காய் வர்த்தகம் தொடக்கம்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் கடந்த 69 நாட்களுக்குப் பின்பு ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் வியாழக்கிழமை தொடங்கியது.


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் கடந்த 69 நாட்களுக்குப் பின்பு ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் வியாழக்கிழமை தொடங்கியது.
நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறும். கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு பொது முடக்கத்தை முன்னிட்டு கடந்த மார்ச 20-ம் தேதி முதல் புத்தடி, போடி ஆகிய இடங்களில் ஏலக்காய் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் புத்தடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தை தொடங்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஹெச்.தினேஷன் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, புத்தடியில் கே.சி.பி.எம்.சி., ஏல நிறுவனம் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்கம் தொடங்கியது. இதில், கேரளத்தைச் சேர்ந்த 30 வியாபாரிகள் சமூக இடைவெளியுடன் வர்த்தகத்தில் பங்கேற்றனர்.
இந்த வர்த்தகத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 219 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், சராசரி தரம் கிலோ ரூ.1,769.93-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,410-க்கும் விற்பனையானது.
விலைக் குறைவு:
பொது முடக்கத்திற்கு முன்பு, கடந்த மார்ச் 19-ம் தேதி நடைபெற்ற ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தின் போது ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.2,359.62-க்கும், உயர் தரம் ரூ.3,198-க்கும் விற்பனையானது. தற்போது ஏலக்காய் விற்பனை விலை சராசரி தரம் கிலோ ஒன்றுக்கு ரூ.589 வரையும், உயர் தரம் கிலோ ஒன்றுக்கு ரூ.788 வரையும் குறைந்துள்ளது.
மேலும், மின்னணு ஏல வர்த்தகத்திற்கு சராசரி 40 ஆயிரம் கிலோ வரை ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 69 நாட்களுக்குப் பின்பு நடைபெற்ற வர்த்தகத்தில், குறைந்த அளவில் 16 ஆயிரம் கிலோ மட்டுமே விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டது.
தமிழக வியாபாரிகள் பங்கேற்கவில்லை:
பொது முடக்கம் காரணமாக தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த ஏலக்காய் வியாபாரிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் முகவர்கள் மற்றும் விவசாயிகள் புத்தடியில் நடைபெற்ற ஏலக்காய் வர்த்தகத்தில் பங்கேற்க முடியவில்லை. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள் தங்கள் கையிருப்பில் உள்ள ஏலக்காய்களை விற்பனைக்கு பதிவு செய்ய முடியாத நிலையும், வர்த்தகத்தில் விலை குறைவும் ஏற்பட்டது.
போடியில் வர்த்தம் தொடங்க அனுமதி வழங்கப்படுமா?:
இடுக்கி மாவட்டம், புத்தடியில் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது போல, போடியில் ஏலக்காய் வர்த்தகத்தை தொடங்கவும், புத்தடியில் நடைபெறும் ஏல வர்த்தகத்தில் பங்கேற்க கேரளத்திற்குச் சென்று வருவதற்கு அனுமதி வழங்கவும் தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள், வியாபாரிகள், ஏற்றுமதி நிறுவன முகவர்கள் மற்றும் ஏலக்காய் ஏல நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...