ஜம்மு-காஷ்மீர்: ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் நால்வர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில், 2 போலீஸார் காயமடைந்தனர்.


ஜம்மு / ஸ்ரீநகர்: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் நால்வர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில், 2 போலீஸார் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ஜம்முவில் செய்தியாளர்களிடம் ஐஜி முகேஷ் சிங் கூறியது: ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சென்றுகொண்டிருந்த லாரியை போலீஸார் நிறுத்தினர். அப்போது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து, சிஆர்பிஎஃப் படையினரும், காவல் துறையினரும் சோதனையிடுவதற்காக வாகனம் அருகே சென்றபோது, அதன் உள்ளே மறைந்திருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்கத் தொடங்கினர். அவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். பாதுகாப்புப் படையினருடன் மற்ற படையினரும் இணைந்துகொண்டனர். 3 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் 2 போலீஸார் காயமடைந்தனர்.
ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்த வந்திருந்த அவர்களது நோக்கம் தோல்வியடைந்தது என்றார் அவர்.
ஸ்ரீநகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஐஜி விஜயகுமார் கூறியது: சில நாள்களாக, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இங்கு ஊடுருவி, தேர்தலைச் சீர்குலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இச்சூழலில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டிடிசி) தேர்தலை சீர்குலைப்பதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சென்றுகொண்டிருந்த அவர்களின் நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பயங்கரவாதிகள் இடையூறு செய்வர் என்ற அச்சமிருந்தது. ஆனால், நிலைமையைச் சமாளிக்க பாதுகாப்புப் படையினர் எப்போதும் தயாராக உள்ளனர். வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு நாங்கள் தகுந்த பாதுகாப்பு அளித்து வருகிறோம். எனவே, அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வேட்பாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டுவது தவறு என்றார் அவர்.
பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி ஊடுருவக் காத்திருக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு, "250 பேர் வரை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், பாகிஸ்தானின் எண்ணத்தை முறியடிக்க பாதுகாப்புப் படை எப்போதும் தயாராக உள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...