புது தில்லி: குடும்பச் சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சமஉரிமை பெண்களுக்கும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்து வாரிசு உரிமைச் சட்டம் - 2005, நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, பெற்றோர் இறந்திருந்தாலும் அவர்களது சொத்தில் மகள்களுக்கு, ஆண் மகன்களுக்கு நிகரான சம உரிமை இருப்பதாக பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், பெற்றோரின் சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும் போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று இந்து வாரிசு உரிமை சட்டம் - 2005, வழிவகை செய்கிறது, அதே சமயம் இந்த சட்டத்தின் ஷரத்துகள் அனைத்தும் சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய காலக் கட்டத்துக்கும் பொருந்தும்.
மகள் எப்போதுமே அன்புக்குரிய மகள்தான், தங்களது வாழ்நாள் முழுவதும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்து வாரிசு உரிமைச் சட்டம் - 2005, நிறைவேற்றப்படுவதற்கு முன்பே பெற்றோர் இறந்துவிட்டாலும், அவர்களது சொத்தில் மகள்களுக்கு சம உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது
இந்து வாரிசு உரிமைச் சட்டம் - 2005, பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இருக்கும் சமஉரிமை, சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்துக்கும் பொருந்துமா என்ற சட்ட ரீதியிலான கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.