நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்போம்: ராகுல் காந்தி

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்போம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டன. 

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறையாததால்  தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. 

தொடர்ந்து, மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பாஜக அல்லாத மாநில அரசுகள், நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 

இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், 'நீட் தேர்வால் சிக்கலுக்கு ஆளாகியுள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். இன்று காலை 10 மணி முதல் #SpeakUpForStudentSafety என்ற ஹேஷ்டேக் மூலமாக நீட் தேர்வு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த உங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள். நாம் ஒன்றிணைந்து மத்திய அரசை கேட்கச் செய்வோம்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com